2020க்குப் பிறகு மீண்டும் சுற்றுப்பயணிகளை அனுமதிக்கும் வடகொரியா

சோல்:

கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வடகொரியா அதன் எல்லைகளை மூடியது.

இந்நிலையில் தற்போது அது மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி வழங்கவிருக்கிறது. அந்தவகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முதல்முறையாக அவ்வாறு அனுமதிக்கப்படுவர் என்றுநம்பப்படுகிறது, இது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளும் மேற்கத்திய நாட்டு சுற்றுப்பயண வழிகாட்டி ஒருவரும் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளனர்.

விளாடிவோஸ்டோக்கைத் தளமாகக் கொண்ட சுற்றுப்பயண நிறுவனம் இந்தச் சுற்றுப்பயணத்திற்கு விளம்பரம் செய்துள்ளது.

வடகொரிய எல்லையில் உள்ள ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராய் மாநில ஆளுநர் கடந்த டிசம்பர் மாதம் வடகொரியா சென்றபோது இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

இந்த நான்கு நாள் சுற்றுப்பயணம், பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

தலைநகர் பியோங்யாங், பனிச்சறுக்கு விளையாடும் இடம் போன்றவை சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களில் அடங்கும்.

கோவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன் சீனச் சுற்றுப்பயணிகள் பெருமளவில் வடகொரியா சென்றுவந்தனர்.

பியோங்யாங், கிருமிப் பரவல் காலத்தில் ஆகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் அது இன்னமும் வெளிநாட்டினருக்கு தனது எல்லைகளை முழுமையாகத் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here