போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் 52 மாணவர்கள்

 

போர்ட்டிக்சன், –

கோவிட்-19 பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று நாடு முழுவதும் திறக்கப்பட்டன.

போர்ட்டிக்சன் மாவட்டத்தில் தாய்ப் பள்ளியாக திகழ்ந்து வரும் போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் 52 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். அதே சமயத்தில் கடந்த 2020 இல் 57 மாணவர்கள் முதலாம் ஆண்டிற்கு சென்றனர்.

பள்ளி நேற்று தொடங்கப்பட்டதால் இன்னும் பல மாணவர்கள் இந்த வாரம் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பல பெற்றோர் கூறினர்.

போர்ட்டிக்சன் ஜாலான் லிங்கி சாலையில் அமைந்துள்ள செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் 7 மாணவர்கள் கால் பதித்தனர். அதே சமயத்தில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே பதிந்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 3 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஆண்டு 6 மாணவர்களும் இந்த ஆண்டு 5 மாணவர்களும் பதிந்துள்ளனர்.

ரொம்பின் பகாவில் அமைந்துள்ள டத்தோ கு.பத்மநாபன் பள்ளியில் 14 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கு சென்றனர். கடந்த 2020 ஆண்டில் இந்த பள்ளியில் 24 மாணவர்கள் கல்வி கற்றனர்.

அதே போல் ரொம்பின் செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஆண்டு 16 மாணவர்களும் இந்த ஆண்டு 16 மாணவர்களும் பதிந்தனர்.
இதனிடையே தம்பின் மாவட்டத்தில் அமைந்துள்ள சுமார் 3 கிலோ மீட்டர் மண் சாலையைக் கடந்து  செல்ல வேண்டிய கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஆண்டு எஸ்.நிரோஷன் எனும் ஒரு மாணவன் சேர்ந்தான். இந்த ஆண்டு அதே ஒரு மாணவன் பள்ளிக்கு வந்தான்.

காலையில் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அழைத்துவந்தபோது வாசலில் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு முகக்கவசத்தை அணிவித்து உடல் வெப்ப பரிசோதனை செய்து கைகளில் கிருமிநாசினி தெளித்து பள்ளி உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர்.

காலையில் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வியமைச்சின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் வருகை புரிந்து பார்வையிட்டனர்.
ரொம்பின் டத்தோ பத்மநாபன் மற்றும் செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இல.மாணிக்கம் வருகைப் புரிந்து பார்வையிட்டார்.

க.கலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here