சீனப் புத்தாண்டு, ரமலான் முன்னிட்டு நிதியுதவி: ஈப்போவில் 800 மாணவர்கள் பலன்!

ஈப்போ:

ப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 800 மாணவர்களின் குடும்பச் சுமையைக் குறைக்கும் வகையில், ‘பெர் ஜெயா கேர்ஸ்’ (Berjaya Cares) அறக்கட்டளை மற்றும் ‘சும்பங்கான் காசி மடானி’ (Sumbangan Kasih Madani) முன்னெடுப்பில் RM250,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

எதிர்வரும் சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்விச் செலவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை ஈடுகட்ட இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ‘எஸ்.ஜே.கே.சி பெர்ச்சாம்’ (SJKC Bercham) பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒவ்வொரு மாணவருக்கும் தலா RM300 ரொக்க உதவி வழங்கப்பட்டது.

“இது சீனப் புத்தாண்டு காலம் என்றாலும், நாங்கள் மலாய் மற்றும் இந்திய சமூகங்களுக்கும் ஆதரவு அளிக்கிறோம். ‘மடானி’ (Madani) என்பது இரக்கம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது.” “நமது நாடு பல இனங்களைக் கொண்டது. நாம் அனைவரும் மலேசியாவின் பிள்ளைகள். ஒற்றுமையும் நல்லிணக்கமும் இல்லையென்றால் நாடு முன்னேற முடியாது. மாணவர்கள் நிம்மதியாகக் கல்வி கற்க அமைதியான சூழல் அவசியம்” என்று, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்,

மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்துவது குறித்து அமைச்சர் சில விளக்கங்களை அளித்தார், அதாவது மசூதிகள், தேவாலயங்கள் அல்லது கோயில்கள் எதுவாக இருந்தாலும், அவை உள்ளூர் அதிகாரிகளிடம் முறையான திட்டமிடல் அனுமதி (Planning Permission) பெற வேண்டியது அவசியம் என்றார்.

அத்தோடு நிலச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சட்ட ரீதியான தீர்வுகள் காணப்படும். வழிபாட்டுத் தலங்கள் பொது ஒழுங்குக்கு இடையூறாகவோ, நதிக்கரை ஒதுக்கீடுகளை ஆக்கிரமிப்பதாகவோ அல்லது போக்குவரத்துக்குத் தடையாகவோ இருக்கக்கூடாது.

ஒழுங்குமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்படும் எந்தவொரு வழிபாட்டுத் தலத்திற்கும் அரசாங்கம் ஆதரவு அளிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே எச்சரித்துள்ளதை அமைச்சர் மீண்டும் அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த நிகழ்வில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி, பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியாவ் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here