–வாக்காளர்களை கவர்ந்த பிரியங்கா
இங்கு பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது. அங்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டாவது நாளான நேற்று அவர் அப்பர் அசாம் பகுதியில் பிஸ்வநாத் சாரியாலி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்றார்.
அங்கு அவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அவர்களுடன் தானும் ஒரு தொழிலாளியாக மாறி தேயிலை பறித்தார்.
அந்த தொழிலாளர்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரது எளிமை, வாக்காளர்களை கவர்ந்தது.
இதையொட்டி அவர்களிடம் பிரியங்கா காந்தி கூறியதாவது:-
தேயிலை தொழிலாளர்களும், அவர்களது வாழ்க்கையும் எளிமைக்கும், உண்மைக்கும் உதாரணம். நான் உங்கள் உரிமைகளுக்காக போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அசாம் , நாட்டின் சொத்துகள். காங்கிரஸ் கட்சி எப்போதுமே உங்களை காக்கவும், மேம்படுத்தவும் போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அசாம் மாநில சட்டசபையின் 126 இடங்களில், குறைந்தது 40 இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், அதிபர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலியை ரூ.167- இல் இருந்து ரூ.217 ஆக பா.ஜ.க. அரசு சமீபத்தில் உயர்த்தியது. ஆனால் அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி ரூ.365 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.