இந்தியாவின் முதல் ‘AI ’ ஆசிரியை ‘ஐரிஸ்’: கேரளா பள்ளியில் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள  KTCT மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. ‘மேக்கர்லேப்ஸ் எடுடேக்’ எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ‘ரோபோ’ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI ஆசிரியர் ரோபோ இதுவாகும்.

இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம்அச்சு அசலாக பெண் உருவில் காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ இயந்திர மனிதன், பன்மொழிப் புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாகப் பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.

இது குறித்து மேக்கர்லேப்ஸ் நிறுவனம், இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில், ‘‘ஐரிஸ் எனும் ஏஐ ஆசிரியர் ரோபோவை அறிமுகம் செய்வதில் மேக்கர்லேப்ஸ் எடுடேக் பெருமை கொள்கிறது. இதன் மூலம் கற்றல் துறையில் புதிய போக்கை உருவாக்கி புத்தாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ளவும், பலவிதமான கற்றல்-கற்பித்தல் முறைகளைப் பின்பற்றவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கவும் ஐரிஸ் ரோபோ கைகொடுக்கும். இந்தக் கண்டுபிடிப்பு கேரள கல்வி முறையில் புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here