சிரியாவிலிருந்து செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதற்காக பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்களை தேர்வு செய்ய முயற்சிப்பதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் 2015- ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 17 பேர் மீது டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, 17- இல் 16 பேருக்கு ஏற்கெனவே 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மற்றொரு நபரான இம்ரான் கான் பதானும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பதானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.