வாழை கழிவிலிருந்து ஆடை, பிஸ்கட் தயாரிக்கும் தொழில்நுட்பம்:

விஞ்ஞானி மயில்சாமியின்  நிறுவனம் கண்டுபிடிப்பு

வாழைத்தண்டிலிருந்து ஆடை,பிஸ்கட், ஊறுகாய் உள்ளிட்ட பல உபயோகமானப் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் என்.டி.ஆர்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகம் தவிர கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் வாழை சாகுபடி அதிகம் என்பதால், என்.டி.ஆர்.எஃப் தலைவர்விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இயக்குனர் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இத்தொழில்நுட்பம் குறித்து நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து இந்தத் திட்டத்தை விளக்கினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, ‘பருத்தி இழையை உருவாக்க அதிக நீர் விரயமாகிறது. எனவே மாற்று முயற்சியாக வாழைத்தண்டிலிருந்து இழையை பிரித்தெடுத்து ஆடை நெய்யப் பயன்படுத்தினால் நீர் சேமிப்பு சாத்தியமாகும். இதற்கான எந்திரங் களின் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன.

வாழைத்தண்டின் உள்பாகத் தில் இருந்து ஊறுகாய், பிஸ்கட்,ஆரோக்கிய பானங்கள் ஆகியவற்றையும் தயாரிக்கலாம். இந்த ஆராய்ச்சி முயற்சிகளில் திருச்சியிலுள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தோடு (என்.ஆர்.சி.பி) இணைந்து என்.டி.ஆர்.எஃப் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வாழைத்தண்டின் நீர்ச்சத்தை பயன்படுத்தி உயிரி உரங்கள், கழிவுப்பொருட்களிலிருந்து ஒலி தடுப்புப் பலகைகள் போன்ற பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்க முடியும். இத்திட்டத்தால் வாழை மர விவசாயிகளின் வாழ்வாதாரம் வலுப்பெறும்’ என்று தெரிவித்துள்ளனர்

திட்ட விவரங்களைக் ஆர்வத்துடன் கேட்டறிந்த எடியூரப்பா, வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் சார்ந்த இந்தத் திட்டத்திற்கு அரசு எல்லா ஒத்துழைப்பையும் வழங்கும் எனத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் என்.டி.ஆர்.எஃப் கூட்டமைப்பு முன்னெடுக்கும் பிறதொழில்நுட்ப ஆராய்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்தச் சந்திப்பில் கர்நாடக முதல்வரின் செயலாளர். செல்வகுமார், ஆலோசகர் லக்ஷ்மிநாராயணா ஆகியோரும் உடனிருந்தனர்.

என்.டி.ஆர்.எஃப் கூட்டமைப்பின் இந்த ஆராய்ச்சி முயற்சிகளை முன்னெடுக்க தமிழக அரசு 7 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here