தமிழக சட்டமன்றத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை – ஐந்து முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

சென்னை:

மிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நாளை (மே 4, திங்கட்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் சசிகலா-ராமதாஸ் தலைமையிலான அணி என ஐந்து அணிகள் மோதுகின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலின்: கொளத்தூர் தொகுதி,

எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி தொகுதி.

விஜய் (தவெக): திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகள்.

சீமான்: காரைக்குடி தொகுதி.

முதல் முறையாகத் தேர்தல் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் (தவெக), திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் முதியவர்களின் வாக்குகளையும் விஜய் ஈர்த்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில், வெற்றி பெறும் வேட்பாளர்களைப் பிற கட்சிகள் இழுக்கக்கூடும் என்ற அச்சம் தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதனால், 234 தொகுதி வேட்பாளர்களுடனும் அவசர ஆலோசனை நடத்திய விஜய், “வெற்றிச் சான்றிதழ் பெற்றவுடன் நேராகப் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும்” எனத் தனது வேட்பாளர்களுக்குக் கறார் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக ஒரு லட்சம் காவலர்கள் மற்றும் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை மூடத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா உத்தரவிட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்று, தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,023 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நாளைத் தெரியவரும்.

தமிழகத்துடன் சேர்த்து கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here