– பசுபிக் கோல்டன் ப்ளோவ் – புதிய வரவு
திருப்பூர் பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன்குளத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் தலைமையில் அமைப்பின் உறுப்பினர்கள் வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
இதில் நஞ்சராயன்குளத்தில் 74 வகை பறவைகள் கண்டறியப்பட்டன. அதில் திடீர் விருந்தாளியாக ‘பசுபிக் கோல்டன் ப்ளோவ்’ பறவை வந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-
திருப்பூரில் இப்பறவையை காண்பது இதுவே முதல் முறை. இப்பறவை இனம் கடற்கரை சார்ந்த பகுதிகளில் சாதாரணமாக தென்படும். குளிர் பகுதியில் இருந்து தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
மீண்டும் திரும்பி ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் கீழே இறங்கியிருக்கலாம். கடந்த 10 வருடங்களில் திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் மட்டும் 185 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வருடம் மட்டும் சிவப்புத்தாரா, கருவால் வாத்து போன்ற இரண்டு அரிய பறவைகள் காணப்பட்டன. மூன்றாவதாக பசுபிக் கோல்டன் ப்ளோவ் பறவையும் இணைந்துள்ளது என்றார்.