நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையை சேர்ந்தவர் நியமனம்

-பொதுத்துறை தேர்வு வாரிய தலைவர் மல்லிகா சீனிவாசன்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த டிராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் (டாஃபே) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராவார்.

தனியார் துறையில் தலைவராக உள்ள ஒருவர் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிக்கானவர்களை தேர்வுசெய்வது பிஇஎஸ்பி ஆகும். இப்பதவிக்கு மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவியாவார்.

பணியாளர் நியமனத் தேர்வு குழுவுக்கான மத்திய அமைச்சரவை இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பதவியில் அவர்மூன்று ஆண்டுகள் இருப்பார்.

1985- ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சைலேஷ் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பொதுத்துறை நிறுவனத் துறையின் செயலராக உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் உறுப்பினராக பொறுப்பேற்கும் காலத்திலிருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பொறுப்பில் இருப்பார்.

பிஇஎஸ்பி அமைப்பானது ஒரு தலைவர், மூன்று முழு நேர உறுப்பினர்களைக் கொண்டதாகும். எம்.கே. குப்தா ,  ரியர் அட்மிரல் சேகர் மித்தல் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மல்லிகா சீனிவாசன் ஏற்கெனவே இந்திய அமெரிக்க வர்த்தகக் கவுன்சில் இயக்குநர் குழுவிலும், டாடா ஸ்டீல் இயக்குநர் குழுவிலும் உள்ளார். இது தவிர சென்னை ஐஐடி, பாரதிதாசன் நிர்வாகவியல் மையம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here