அம்மன் கோவிலில் செய்யக் கூடாதவை

1. அம்மன் கோவிலுக்குள் நுழையும் போது நுழைவு வாசலில் இருக்கும் படியை மிதிக்கக் கூடாது. பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் ராஜகோபுரத்தின் கீழ் இருக்கு நுழைவு படியை மிதிக்காமல், தாண்டி சென்று தான் உள்ளே இருக்கும் தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது மரபு. அதிலும் அம்மன் கோவில்களில் அம்மனின் காவல் தெய்வங்கள் இந்த படியில் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த படிகளை மிதித்து செல்வதால் அவர்களை அவமதிப்பது போல் ஆகி விடும். இது அம்மனின் கோபத்திற்கு ஆளாவதுடன், நம்முடைய வழிபாட்டிற்கும் உரிய பலன் கிடைக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்து விடும் என சொல்லப்படுகிறது.

2. மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் போன்ற உக்கிர சக்தி கொண்ட அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடும் போது, அம்பாளின் முன்பு சென்று கண்களை மூடி வழிபடக் கூடாது. அம்பாளில் திருமுகத்தை பார்த்து, நம்முடைய மனக்குறைகளை மனமுருகி வழிபட வேண்டும். இதனால் அம்பிகையின் அருட் பார்வையும், அம்பாளின் திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகளும் நம்முடைய கண்களால் ஈர்க்கப்பட்டு, நமக்குள் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி, நன்மைகளை தரும் என்பது நம்பிக்கை. அதே போல் கோவிலில் தீபாராதனை காட்டும் போதும் கண்களை மூடி வேண்டாமல், கண்களை திறந்து அந்த திருக்காட்சியை முழுவதுமாக தரிசிக்க வேண்டும்.

3. அம்மன் கோவில்களில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கை பிரதான அம்மன் சன்னதிக்கு முன் நேருக்கு நேராக ஏற்றக் கூடாது. கோவில் பிரகாரத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே எலுமிச்சை விளக்கை ஏற்ற வேண்டும். மூலவர் அம்மன் சன்னதிக்கு எதிராக விளக்கேற்றுவதற்கு என்று இருக்கும் இடத்தில் நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம், மாவிளக்கு தீபம் ஆகியவற்றை மட்டுமே ஏற்ற வேண்டும்.

4. கோவிலில் உள்ள கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் நிழலை மிதிக்கக் கூடாது. அதே போல் ராஜகோபுரத்தில் நிழலையும் மதிக்கக் கூடாது. கோவிலின் கொடிமரம், பலிபீடம், கோபுரம் என்பவை தெய்வீக சக்தி உறையும் இடமாகும். இவற்றின் நிழலை மிதிப்பது கூட அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை அவமதிப்பதற்கு சமமானதாகும்.

5. அம்பாளின் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாகத் தவறான திசைகளில் சுற்றி வருதல் கூடாது. பொதுவாக அம்மன் கோவிலில் ஐந்து முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் வெற்றியும், மன நிம்மதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வலம் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here