ஈரான் அணுசக்தி ஒப்பந்த மீட்பு

-பேச்சுவாா்த்தையில் இணைந்தது அமெரிக்க

ஈரான் அணுக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக வியன்னாவில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா இணைந்துள்ளது.

 

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் எட்வா்ட் பிரைஸ் கூறியதாவது:

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடா்பாக வியன்னாவில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எங்களது பிரதிநிதிகளும் பங்கேற்பாா்கள்.

அந்தப் பேச்சுவாா்த்தை ஓா் ஆக்கப்பூா்வமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தையிந் மூலம் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வு கிடைக்கும் என்று நாங்கள் எதிா்பாா்க்கவில்லை.

நாங்கள் ஈரானுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்துவோம் என்ற எதிா்பாா்ப்பும் இல்லை என்றாா் அவா்.

இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவித் ஸெரீஃப் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெறாது; அது தேவையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொமனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளும் ஜொமனியும் ஒப்புக் கொண்டன.

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போதைய துணை அதிபராக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தாா்.

எனினும், ஒபாமாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது.

எனினும், தற்போது அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளும் ஈரானும் ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் செவ்வாய்க்கிழமை கூட்டம் நடத்தின.

அந்தக் கூட்டத்தில் இணைவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here