நக்சல் அங்கிள், என் அப்பாவை விட்டுடுங்க

– 5 வயது மகளின்  உருக்கம்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர் தொடர்பான விவரங்கள் வெளிவந்துள்ளன. அவரை மீட்கக் கோரி, மத்திய அரசுக்கு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தன் தந்தையை கடத்திய மாவோயிஸ்டுகளுக்கு 5 வயது மகள் உருக்கமான வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இன்னும் சிலரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்முவைச் சேர்ந்த கோப்ரா கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் என்பவரை கடத்திச் சென்றுள்ள மாவோயிஸ்டுகள், “கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் மன்ஹாஸ் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கள் சிறையில் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த அழைப்பின்போது மற்ற தகவலை தருகிறோம்” என திங்கள்கிழமை காலை 11.26 மணிக்கு மொபைல் போன் மூலம் சுக்மா மாவட்ட பத்திரிகையாளரிடம் கூறியிருக்கின்றனர்.

மொபைல் போனில் பேசியவர் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்களில் ஒருவர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, மன்ஹாஸின் மனைவி மீனு தனது கணவரை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிநந்தனை பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்து வந்த விதத்தை போல, எனது கணவரைப் பாதுகாப்பாக மீட்கும்படி மோடிஜியிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கடைசியாக என் கணவருடன் வெள்ளிக்கிழமை பேசினேன். அவர் ஒரு ஆபரேஷனுக்குப் போவதாகவும், பின்னர் என்னுடன் பேசுகிறேன் என்றும் அவர் என்னிடம் கூறினார்.

கடந்த இரண்டு நாள்களாக என் கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை. எங்களுக்குத் தெரிந்தவை செய்தி ஊடகங்களிலிருந்து வந்தவை. நாங்கள் அதிகாரிகளையும் கட்டுப்பாட்டு அறையையும் அழைத்தோம். ஆனால், தகவல் வந்தவுடன் அவர்கள் எங்களை தொடர்புகொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த 48 மணி நேரத்தில் மன்ஹாஸுடன் போலீசாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. துப்பாக்கிச் சூட்டின்போது குழப்பத்தில், பதுங்கியிருந்த பாதுகாப்புப் படையினர் காடு முழுவதும் சிதறி மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டைகளை நடத்தியுள்ளனர்.

இதில் தப்பித்தவர்கள் சிலர் தங்கள் முகாம்களில் வந்து சேர்த்தனர். ஆனால், மன்ஹாஸ் மட்டும் இன்னும் காணவில்லை. நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசியுள்ள டி.ஐ.ஜி ஓ.பி பால், பத்திரிகையாளரை மொபைல் மூலம் அழைத்து ஜவான் கடத்தப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்த மாவோயிஸ்ட்கள் அழைப்பின் நம்பகத்தன்மை குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

ஜவான் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார். ஜவான் காணாமல் போவதற்கு பல சாத்தியங்கள் இருக்கலாம். அவர் உயிருடன் இருக்கலாம், காயமடைந்திருக்கலாம். எனினும் அவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களைப் பற்றி மேலும் ஆராய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, மன்ஹாஸின் 5 வயது குழந்தை, அவரை விடுவிக்க கோரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘நக்சல் அங்கிள் என் தந்தையை விடுவியுங்கள்” என்று அழுதுகொண்டே குழந்தை பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here