–பாமாயில் இறக்குமதிக்கு இலங்கையில் தடை
இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச தடை விதித்துள்ளார். மேலும்உள்நாட்டில் விளையும் பாமாயில் மரங்களில் 10 சதவீத மரங்களைப் பிடுங்கிவிட்டு ரப்பர் மரங்களை நடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு தேங்காய் எண்ணெய் துறையை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக பாமாயில் இறக்குமதியைக் குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. மலேசியா , இந்தோனேசியாவிலிருந்து இலங்கை 2 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்கிறது. இதைமுற்றிலுமாக நிறுத்த இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு பாமாயில் உற்பத்தியாளர்களும் படிப்படியாக உற்பத்தியைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு இலங்கை சுங்கத் துறை இயக்குநரகத்துக்கும், இலங்கை ஏற்றுமதி இறக்குமதி இயக்குநரகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆறு மாதத்துக்கு முன்பே பாமாயில் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று அதிபர் கூறியிருந்ததாக அதிபரின் செயலர் தெரிவித்துள்ளார்.
பாமாயில் இறக்குமதி மற்றும் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம்உள்நாட்டு தேங்காய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். உலகின் மொத்த தேங்காய் சார்ந்த பொருட்கள் வர்த்தகத்தில் இலங்கையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.