‘அமைதி’யும் இந்தியாவின் ‘இருமுனை’ வியூகமும்!

எல்லையில் சீனாவுடன் மீண்டும் பேச்சு

சீன எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் எல்லையில் பதற்றம் குறையுமா? இந்தியா முன்னெடுத்துள்ள ‘இருமுனை’ வியூகம் பலனளிக்குமா? 

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்திய, சீன ராணுவங்கள் ஒரேநேரத்தில் பின்வாங்கி, பதற்றத்தை குறைத்தது போலவே, இந்திய – சீன எல்லையில் அனைத்து பிரச்சினைகளையும் படிப்படியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வருடம் கோடை காலத்தில் வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏற்படும் பதற்றத்தை தவிர்த்து, இரண்டு நாட்டு படைகளும் ரோந்துப் பணிகளை அமைதியான முறையில் நடத்த வேண்டும் எனவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

டெஸ்பாங், கோக்ரா, ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ உள்ளிட்ட லடாக் எல்லையில் உள்ள பல்வேறு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் 11-ஆவது கட்ட பேச்சுவார்த்தை வழிநடத்தப்படும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

அதேசமயத்திலே ஏற்கெனவே பதற்றம் தணிக்கப்பட்டுள்ள இடங்களில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக் கூடாது எனவும் சீன அரசு சீன ராணுவ பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் பல்வேறு எல்லைப் பகுதிகளிலே ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். குளிர் காலத்தில் கடுமையான பணி நிலவுவதால் பொதுவாக ரோந்துப் பணிகளுக்கு கோடை காலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

லடாக் எல்லை  அருணாச்சல பிரதேச எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில வருடங்களாக சீன ராணுவம் அத்துமீறல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் சீன வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தும்போது பதற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில்தான் சென்ற வருடம் பதற்றம் மீண்டும் அதிகரித்து.

கல்வான் மோதல்:

சென்ற வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற திடீர் மோதலில் 21 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவம் கொன்று குவித்தது. இந்த மோதலில் சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அது குறித்து சீன ராணுவம் அதிகாரபூர்வமாக இதுவரை முழு விவரங்களை வெளியிடவில்லை.

பதற்ற, அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் லடாக் பகுதியில் வீரர்களைக் குவித்து, ஆயுதங்களையும் அதிக அளவில் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்திய வீரர்கள் சில முக்கிய உச்சிகளில் முகாம்கள் அமைத்து அங்கே பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை குவித்ததன் காரணமாக சீன ராணுவத்துக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த உச்சிகளில் இருந்து சீனா ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம் கண்காணிப்பது சுலபமானது.

ஒருவேளை கூடுதல் ஊடுருவல் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும் புதிய முகாம்கள் உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரஃபேல் வருகை:

இந்தியா ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆயுதங்களை லடாக் எல்லையருகே குவித்தது. அதேசமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லே , லடாக் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்து ராணுவ வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்தியது இந்தியாவின் கரம் வலுப்படுத்தப்படுகிறது என்று வலியுறுத்தியது.

பிரதமர் மோடி உள்ளிட்டோர் எப்பாடுபட்டேனும் எல்லையை பாதுகாப்போம் என்றும், ஓர் அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்தது, இந்தியா எதற்கும் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டியது.

10 கட்ட பேச்சுவார்த்தைகள்:

இதைத்தொடர்ந்து சீன ராணுவம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, பல கட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. சென்ற வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வரை 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் 2 ராணுவங்கள் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் பல்வேறு கட்டங்களாக எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையே, அமெரிக்காவில் பதவிக்கு வந்த ஜோ பைடன் அரசு சீன ராணுவத்தை கடுமையாக கண்டித்து வந்த நிலையில், இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படைகள் பின்வாங்கும் ஒப்பந்தத்தை அமல்படுத்தலாம் என சீன ராணுவம் ஒப்புக்கொண்டது. அதைத்தொடர்ந்து பாங்காங் ஏரியின் கரைகளுக்கு அருகேயிருந்த இந்திய மற்றும் சீன ராணுவத்தை சேர்ந்த முகாம்கள் பரஸ்பரம்
பின்வாங்கப்பட்டன.

பிற பிரச்னைகள்:

அடுத்த கட்டமாக எல்லைக் கட்டப்பட்டு பகுதி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும் என இரண்டு பக்கங்களும் ஒப்புக்கொண்டுள்ளது. ஒருபுறம் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லையில் குண்டுவீச்சு நடத்தக்கூடாது என்றும், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவக் கூடாது எனவும் இந்திய அரசு கண்டிப்பாக சொல்லிவருகிறது.

அதேசமயத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்ற அமெரிக்கா பரப்பிய அவப்பெயரும் உள்ளதால், சீனா பேச்சுவார்த்தைகளைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா தொடர்ந்து லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரமாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறது.

ஜப்பான் , தைவான் ஆகிய நாடுகளுடனும் சீனாவுக்கு உரசல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட அழுத்தம் அதிகரிக்கும் என இந்தியா எதிர்பார்க்கிறது. அதேசமயத்தில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பையும் இந்திய வேகப்படுத்தி வருகிறது.

ஒருபுறம் பாதுகாப்பை அதிகரிப்பது, அதேசமயத்தில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி தேடுவது என்று இந்திய அரசு பின்பற்றிவரும் ‘இருமுனை’ வியூகம் பலன் அளிக்குமா என்பது பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பேச்சுவார்த்தை நீர் மேல் எழுத்தாகவே எப்போதும் இருக்கிறது. இப்படியிருந்தால் சமாதானம் எப்படி உருவாகும்? 

இந்திய எல்லை ராணுவம்  எப்போடும் கவனமாகவே இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here