சென்னையில் கடும் வெயில்: மக்களுக்கு நாள்தோறும் 105 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம்

 

சென்னை, அகஸ்ட்டு 9:

தமிழ்நாட்டில் கடும் கோடைக் காலம் முடிந்துவிட்டது என்றாலும் பல பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

வழக்கத்தைவிட வெப்பம் கூடுதலாக இருப்பதால் தண்ணீர் புழக்கம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் குறையாமல் இருப்பதாலும் பூமியில் நீர்மட்டம் ஓரளவுக்கு நிலையாக இருந்து வருவதாலும் தண்ணீர் பஞ்சம் இப்போது ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

தலைநகர் சென்னையில் இதர பகுதிகளைவிட வெப்பம் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த நகரில் மக்களின் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது.

பொதுவாக சென்னையில் நாள் ஒன்றுக்கு மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் 1,000 மில்லியன் லிட்டர் (100 கோடி லிட்டர்) குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இப்போது கடும் வெப்பம் காரணமாக தேவை அதிகரித்து இருப்பதால் 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 105 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

குழாய் மூலமாகவும் லாரிகள் வழியாகவும் சென்னை நகர மக்கள் குடிநீரைப் பெற்று வருகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை அதன் குடிநீர் தேவையை புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் நிறைவேற்றி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ளது. இந்த வளம் ஓராண்டு காலத்துக்குப் போதும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்குப் பருவமழை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கிவிடும். பருவமழையின் விளைவாக ஏரிகளில் தண்ணீர் அளவு உயர்ந்துவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மொத்தமாக இப்போதைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here