தூசு தட்டினால் போதும் துறைகள் மேம்படும்

அலசுகிறார் பெஞ்சமின் பெரியசாமி

-பேசித்தீர்க்க பேரிச்சம் பழம் போதும்

நாட்டின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்துவது ஒரு  பொழுதுபோக்கான செயல் என்ற தோற்றம் இப்போது உருவாகிவருகிறது .

இது சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று நாட்டின் பொருளாதாரம், வடிவமைபத்திட்ட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். பிரச்சினை இலகுவானதுதான். அதில் எழும் பிரச்சினைகள் தீர்க்க முடியாததல்ல. இதில் ஈகோயிசம் மிக மோசமானததாக மையமிட்டிருக்கிறது.

நாட்டின் நீர் பிரச்சினை மிக மோசமான அரசியல் விளையாட்டாக மாறிவருகிறது. இதனால் யாருக்கும் ஆதாயம் இல்லை. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சாகவே இருக்கிறது.

இதனால் வெளியார் முதலீடுகள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பினாங்கு ,கெடா மாநிலங்களுகிடையிலான நீர்ப்பிரச்சினை உலகப் பிரச்சினையல்ல. ஓர் அறைக்குள் பேசி முடிக்க வேண்டிய இடியாப்ப பிரச்சினை. 

பேச முடியாது என்று குடும்ப உறவுகள் தடுக்கவில்லை. ஆனாலும் திமிர் எடுத்த திணவுகளே தடுக்கின்றன. இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் மக்கள் என்பது ஏன் புரியவில்லை. இதற்குப்பெயர் தூங்குவதுபோலும் ஏமாற்றுவதாகும்.

நீர் வளம் இயற்கையின் அருட்கொடை என்று கூறிக்கொண்டிருப்பதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் இருக்கிறது. ஒரே நாட்டில் மண்ணை அணைத்துத்தழுவி ஓடும் ஓடை யாருக்குச் சொந்தம்?  நீரைபிரித்தெடுத்து , அணைபோட்டுக்கொள்ள யார் பாட்டன் வீட்டு சொத்து  இது. 

பினாங்கு மாநிலத் தேவைக்கான நீரைக்கொடுக்க கெடாவின் பேரம் ஆண்டுக்கு 5 கோடியாம். உள்ள படியே இது நீருக்கான பேரமாகத் தெரியவில்லை. இரு மாநிலங்களுக்கிடையிலான ஈகோயிசம் என்பதாகவே இருக்கிறது. இரு மாநிலங்களும் வெவ்வேறு கட்சிக் கூட்டணிகளால் ஆளப்பெறுகின்றன என்பதுதான் வேற்றுமை எண்ணத்திற்குக் காரணாமா?

மக்களின் அடிப்படைத்தேவை நீர் . இதைத்தடுக்க நீர் யார் என்று மக்கள் கொதித்துக்கிடக்கின்றனர். நாடும் நாட்டுமக்களும் நாட்டின் உயர்மட்டம் என்று கூறிக்கொள்கின்றவர்களும் இனவாதக் கொள்கையிலிருந்து விடுபட்டால்தான் நாட்டின் வளப்பம் பயனுள்ளதாக மாறும்.வெளிநாட்டினரும் மதிப்பர். முதலீடுகளும் நுழையும். 

உலகலாவிய மதிப்பில் பினாங்கு மாநிலம் இன்றளவும் நற்பெயரோடு திகழ்கிறது, ஆனால் கொசுக்கடிகளின் தொல்லைகள் ஒரு பக்கம் கேடாய் மாறிக்கொண்டிருக்கிறது.  

பல பிரச்சினைகளுக்குத் தீர்வு பேசிக்களைவது. திறந்த மனத்துடன் பேசினால் பிரச்சினைகள் இல்லாமல் செய்துவிடலாம் . ஆனாலும் தூபம் போட்டு பெரிதாக்கும் செயல் வீர்ர்கள் அப்படிச்செய்ய விடுவார்களா என்ன?

எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டுமே என்பதுதான் மகத்தான் கொள்கையாக இருக்கும்போது மக்கள் நலம் கெடுவது பற்றியா கவலைப் படப்போகிறார்கள்.

கா.இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here