இந்திய தொழிலதிபர் யூசுப் அலிக்கு சிறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இவ்விருதை நேற்று முன்தினம் வழங்கி கவுரவித்தார்.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான யூசுப் அலி (65), அபுதாபியில் வர்த்தகம் சார்ந்த பணிகள் மற்றும் தொழில் துறையில் மிக முக்கியமான பங்களிப்பை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதை வழங்கி இளவரசர் ஷேக் முகமது பேசியதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தின் புராதன கலாசாரம் இதை உருவாக்கிய ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களுக்குப் பிறகும் தொடர்கிறது. மனித நேயம், அன்பு, பிறருக்கு உதவும் ஈகைக் குணம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர்.

இத்தகைய குணங்கள் இன்றளவும் தழைத்து நிற் பதற்கு நாம் கலாசார ரீதியாக மனித நேயத்தை மறக்காதவர்களாக விளங்குவதுதான் காரணம். இந்தவிழாவில் 12 தனி நபர்கள், அவர்களது சிறப்பான செயல்பாடுகளுக்காக கவுரவிக்கப்படு கின்றனர்.

இவர்கள் அனைவருமே தன்னலமற்ற சேவை மூலம் நமது சமூகம் வலுப்பட பாடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

விருது பெறும் தனி நபர்கள் அவரவர்கள் துறை மட்டுமின்றி மருத்துவம், சுகாதாரம், சமூக சேவை உள்ளிட்டவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களாவர் என்று குறிப்பிட்டார்.

மிகவும் பெருமையான, உணர்வு ரீதியில் சந்தோஷமான தருணமிது என்று விருது பெற்ற பிறகு யூசுப் அலி குறிப்பிட்டார்.

உயிர் தப்பினார் யூசுப் அலி

விருது பெற்றதை தனது சொந்த மண்ணில் உறவினர்களுடன் கொண்டாட கேரளாவுக்கு வந்த தொழிலதிபர் யூசுப் அலி, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த யூசுப் அலி, அவரது உறவினர்கள், பைலட் உள்ளிட்ட 7 பேரும் உயிர் தப்பினர். தற்போது இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

குபோஸ் மைதானத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர், அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிகுந்த சப்தத்துடன் தரையிறங்கிய இந்த ஹெலிகாப்டர், சாலையோரம் இருந்த சகதியில் பாதிக்கும் மேலாக மூழ்கியது. விபத்து நடந்த இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில்தான் யூசுப் அலியின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கமெண்ட்: செய்த தர்மம் தலைகாக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here