விழித்துக் கொண்டனரா – நெறுக்கும் இளையோர்!

 நெருக்கடிகளால் திணறும் அரசியல்

நாடு தற்போது பல்வேறு சவால்களால் சுழப்பட்டுள்ளது. பல மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களின் வணிகத்தை இந்தோனேசியாவுக்குக் கொண்டு போய்விட்டன. மேலும் பல நிறுவனங்கள் அவற்றின் அடிச்சுவட்டைப் பின்பற்றலாம் என்ற அச்சம் தலைதூக்கி வருகிறது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டும் அன்றி, வேலை வாய்ப்புகளும் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. பல ஆயிரம் மலேசியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடிகள் மிகக் கோரமாகி வருகின்ற நிலையில், பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்தே தீர்வது என்பதில் அம்னோ பிடிவாதமாக இருந்துவருகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒரு சிறப்புக் கூட்டத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கான தன்னுடைய ஆதரவை மீட்டுக்கொள்வதோடு அமைச்சரவையில் இருந்து உடனடியாக விலகும்படி தன்னுடைய அமைச்சர்கள், துணை அமைச்சர்களுக்கு அம்னோ அதிரடியாக உத்தரவிடும் என்ற தகவல் தற்போது அரசல் புரசலாகப் பரவி வருகிறது.

அம்னோவுக்குள்ளேயே இவ்விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிளவைத் தவிர்க்க இயலாது என்ற நிலையும் உறுதியாகி வருகிறது.

இது ஒரு புறமிருக்க பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இணைந்து அவசரகாலத்தை ரத்துசெய்து நாடாளுமன்றத்தைத் திறக்கக் கோரும் ஒரு மகஜரை அரண்மனையில் சமர்ப்பித்திருக்கின்றனர்.

தவிர, நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படாததால் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட முடியாமல் செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, மிகப்பெரிய அளவிலான நிதிகள் பயன்படுத்தப்படுவது நாட்டிற்கு மிகப்பெரிய பாதகங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவர்களோடு நாட்டு மக்களும் தற்போது இணைந்துகொண்டுள்ளதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. மக்களின் மனக்குமுறல் அதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவர்கள் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.

அரசாங்கத்தைக் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். அவசரகாலப் பிரகடனத்தின் பின்னணியில் நடந்துவரும் அரசியல் விளையாட்டுகளை அவர்கள் பகிரங்கமாகவே கண்டிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இளையோரின் பங்கு இதில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு உத்வேகம் பெற்றிருக்கிறது. கேட்கும் இடத்தில் இவர்கள் இருக்கின்றனர். பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அரசாங்கம் இருக்கிறது. ஆனால், பதில்தான் வந்தபாடில்லை.

மலாய்க்காரர்கள் பெரும் அளவில் கோபத்தில் இருப்பதும் அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் பளிச்சென வெளிப்படுகிறது. அவர்களின் நியாயமான கேள்விகளுக்கும் மன உணர்வுகளுக்கும் தெளிவான பதில் கிடைக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

நாட்டு மக்களே கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமையும் நாட்டு நடப்பும் தற்போது விபரீதமாகி வருகிறது. கோவிட்-19 தடுப்பூசி தொடங்கி அதற்கு 2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி பற்றியும் இளையோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பட்ஜெட்டில் கோவிட்-19 தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு 300 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகை தற்போது 500 கோடி என உயர்வு கண்டிருப்பது ஏன் என்று மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தவிர தடுப்பூசி கொள்முதல் ,  அதன் விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது ஏன் என்பதும் அவர்களின் கேள்விகளாக இருக்கின்றன. 300 கோடி எப்படி திடீரென 500 கோடியாக உயர்வு கண்டது என்பதற்கும் பதில் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டால் இவற்றுக்குத் தெளிவான விளக்கங்களும் பதில்களும் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது என்று இந்த இளையோர் நம்புவது சத்தியமான உண்மையாகும்.

இதனை நாட்டை நிர்வகிப்பவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும். தாமதங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏன் ஆட்சிக்கும் நல்லது அல்ல!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here