இந்தியர்களின் முக்கியத் தொழில்துறைகள்

   அந்நியத் தொழிலாளர்களுக்கு

– அனுமதி அளிப்பீர்!

இந்தியர்கள் அதிகமாக ஈடுபடும் தொழில் துறைகளில் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோலாலம்பூர், சிலாங்கூர் மாநில இந்தியர் வர்த்தக- தொழிற்துறை சம்மேளனத் தலைவர் டத்தோ ஆர். ராமநாதன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த சம்மேளனத்தின் 92 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் தலைநகரிலுள்ள சிலாங்கூர் கிளப்பில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகராக எச்ஆர்டி கார்ப் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமிட் டாவுட் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஆர். ராமநாதன், எங்கள் சம்மேளனம் 92ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எங்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த தரப்பினர் அண்மைய காலமாக அந்நியத் தொழிலாளர் தருவிப்பு தொடர்பில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தினர், உலோக மறுசுழற்சி நிறுவன உரிமையாளர்கள் தரப்பினர் போன்றவர்களை ஒன்றிணைத்து கடந்த மாதம் நாங்கள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனை சந்தித்து எங்கள் பிரச்சினையைத் தெரியப்படுத்தினோம்.

அவரும் இந்த அந்நியத் தொழிலாளர் தருவிப்பு விவகாரத்திற்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஆனாலும், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் எல்லைப் பகுதிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது நாட்டில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை சட்டப்பூர்வ அந்நியத் தொழிலாளர்களாக்கும் கட்டமைப்புத் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, முடிதிருத்தம், பொற்கொல்லர், உலோக மறுசுழற்சி, பாதுகாவலர் ஆகிய துறைகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

தொழிலாளர்கள் தங்குமிட விவகாரங்கள் குறித்த சட்ட அமலாக்கத்தையும் அரசாங்கம் இவ்வாண்டு இறுதிவரை ஒத்திவைத்துள்ளது எங்களுக்கு பேருதவியாக உள்ளது.

நிச்சயம் நாங்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை முழுவதுமாகப் பின்பற்றுவோம் எனவும் அவர் கூறினார்

 

-செய்தி- எஸ். வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here