–தமிழையும் சமயத்தையும் பிரிக்கவே முடியாது
ஊடகவியலாளர்களும் நாட்டில் அங்கீகரிக்கப்பட வேண்டிய முக்கிய முன்களப் பணியாளர்கள் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கருத்துரைத்தார்.
முன்னதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ம.இ.கா. தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்புப் பிரமுகராக அமைச்சர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இம்முறை முருகு சுப்பிரமணியன் பெயரில் மக்கள் ஓசை ஞாயிறு ஆசிரியர் கு. தேவேந்திரனுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
மலேசியத் தமிழ் எழுத்துத் துறையில் ஊடகவியலாளர்கள் ஆற்றும் பங்கு அளப்பரியது. அவர்களுக்கும் அவ்வப்போது இதுபோன்ற அங்கீகாரங்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழையும் சமயத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. ஆனால், தமிழும் சமயமும் வெவ்வேறு என்ற கோட்பாட்டினை முன்வைத்து புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளதையும் நாம் காண முடிகின்றது.
குறிப்பாக, சமஸ்கிருதம் தான் கடவுள் மொழி என்றால் அதனை இங்குள்ள அமைப்புகளுக்கு ஏன் சொல்லித் தரவில்லை என்ற கேள்வியையும் அமைச்சர் முன் வைத்தார்.
என்னுடைய மொழியில் என் இறைவனுக்குச் சொன்னால்தான் புரியும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அடியார்கள் அனைவரும் தமிழ்மொழியை வைத்துத்தான் இறைவனை அடைந்தனர்.
தற்போது தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படுவது நல்லது. நம் நாட்டில் வாழும் இந்தியர்களுள் மூன்றில் ஒரு விழுக்காட்டினர் இன்னும் 20 ஆண்டுகளில் முதுமை காரணமாக மரணமடைந்து விடுவார்கள் என ஆய்வு ஒன்று சொல்கிறது.
இச்சூழ்நிலையில் நமக்குள் தேவையற்ற நிலைப்பாடுகளும் குழப்பங்களும் வேண்டாம் என அவர் தமதுரையில் அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு முன்னதாக அறிவித்திருந்த 70 ஆயிரம் வெள்ளியோடு கூடுதலாக 30 ஆயிரம் வெள்ளி சேர்த்து ஒரு லட்சம் வெள்ளியாக இரு மாதங்களுக்குள் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
-எஸ். வெங்கடேஷ்