( ரெ.மாலினி)
மலாக்கா மாநில சட்டமன்றம் (DUN) உடனடியாக கலைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்கள் மாநிலத் தேர்தலுக்காக (சட்டமன்றத்தை கலைத்திருந்தாலும், மலாக்கா அதனை தற்போது பின்பற்றாது என்று முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யுசோ கூறினார்.
மக்களின் நலன் மற்றும் நிர்வாகம் தொடர்பான சில முக்கிய பணிகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால், தற்போது சட்ட மன்ற கலைப்பு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
மேலும், மலாக்கா மாநில சட்டமன்றத்தின் காலாவதி தேதி 30 டிசம்பர் 2026 எனவும், அதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் கலைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
“ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சூழ்நிலை மலாக்காவுக்கு பொருந்தாது. மற்றவர்கள் இசைக்கும் இசைக்கேற்ப நாம் ஆடமாட்டோம். அவர்களின் பாதை வேறு, மலாக்காவின் பாதை வேறு,” என்று அவர் மேலும், சட்ட மன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என எந்த தரப்பினரிடமிருந்தும் அழுத்தம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, பிற மாநிலங்களுடன் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்பை அவர் மறுக்கவில்லை.
“அரசியல் என்பது ஆயிரத்து ஒன்று சாத்தியங்களின் கலை. என்ன நடக்கும் என்பதை காத்திருந்து பாருங்கள்,” என்று அவர் கூறினார்.




















