கோலாலம்பூர்:
மலேசியாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டும் வகையில் ஆன்லைனில் பரப்பப்பட்டு வரும் மனுவிற்கு (Online Petition) மனித உரிமைகள் அமைப்பான புசாட் கோமாஸ் (Pusat Komas) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘அக்கு அனாக் மலேசியா’ (Aku Anak Malaysia) என்பவரால் கடந்த வாரம் change.org தளத்தில் தொடங்கப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்றுள்ள அந்த மனு, ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைத் தூண்டும் தவறான தகவல்களைக் கொண்டுள்ளதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.
ரோஹிங்கியா அகதிகளின் வருகையால் நாட்டின் வளங்கள் மற்றும் சமூகச் சேவைகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், மலேசிய மக்கள் தொகையில் வெறும் 0.4 விழுக்காடு மட்டுமே உள்ள இந்தச் சமூகத்தைப் பற்றி போதிய தரவுகள் இன்றி இத்தகைய கருத்துகள் பரப்பப்படுவதாகவும் புசாட் கோமாஸ் சாடியுள்ளது.
மியான்மார் அரசாங்கத்தின் இனப்படுகொலை மற்றும் வன்முறைகள் காரணமாக மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள இந்த அகதிகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படும் வேளையில், அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இந்த மனுவைச் change.org தளம் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.





















