யாருக்கு ஓட்டு?

பொறுத்திருந்து முடிவு செய்வோம்- மக்கள்

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பதைப் பொறுத்திருந்து முடிவுசெய்வோம் என்ற மனப்போக்கை பெரும் எண்ணிக்கையிலான மலேசியர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுத்தேர்தல் விரைந்து நடத்தப்பட்டால் யாருக்கு ஓட்டு போடுவது என்ற சந்தேகத்தில் இருந்துவரும் மலேசியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று இன்வோக் மலேசியா என்ற இயக்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021 பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் மலேசியர்களுள் கிட்டத்தட்ட 51 விழுக்காட்டினர் வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் இருப்பது தெரியவந்தது.

16 விழுக்காட்டினர் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் 8 விழுக்காட்டினர் பாரிசான் நேஷனலுக்கும் 4 விழுக்காட்டினர் முவாஃபக்காட்டிற்கும் 3 விழுக்காட்டினர் பக்காத்தான் ஹராப்பானுக்கும் வாக்களிப்பர் என்று தெரிவித்த நிலையில் 17 விழுக்காட்டினர் எவ்விதப் பதிலும் தராமல் ஒதுங்கிக்கொண்டனர்.

2020 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற ஓர் ஆய்வின் முடிவுகள் இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. அப்போது 37 விழுக்காட்டினர் மட்டுமே முடிவு செய்ய முடியாமல் இருந்தனர்.

ஆனால், அந்நிலை இன்று மாறுபட்டு முடிவுசெய்யாமல் இருப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 விழுக்காடு அதிகரித்து 51 விழுக்காட்டை எட்டியிருக்கிறது.

2020 டிசம்பரில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 16 விழுக்காட்டினர் தேசிய முன்னணி கூட்டணிக்கு ஆதரவாக இருந்தனர். தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு 15 விழுக்காட்டினரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 5 விழுக்காட்டினரும் முவாஃபக்காட் நேஷனல் கூட்டணிக்கு 4 விழுக்காட்டினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தன்னுடைய எதிர்காலம் குறித்து ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இருக்கும் அம்னோவின் நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் மலேசியர்கள், அவர்களின் ஆதரவை இடம் பெயரச் செய்திருப்பது தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here