சித்ரா பௌர்ணயின் சிறப்புகள் என்ன?

பொருளும் அருளும் வழங்கும்

சித்ர குப்த வழிபாடு!

சித்திரையா ! தை மாதமா என்பது இப்போது பரவலான சர்ச்சை. சர்ச்சைகள் ஒருபக்கம் . இயல்பான நடைமுறைகளைப் பின்பற்றும் பழக்கம் ஒரு பக்கம். எதையுமே செவிமடுக்காமல் தம் வழியே போய்க்கொண்டிருக்கும் மக்கள் ஒரு பக்கம் . 

ஆனாலும் நம்பிக்கை என்ற கிளைகளைப்பற்றி வழக்கத்தில் ஊறிவிட்டவர்கள் சித்திரை நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.  

சித்ரா பௌர்ணமி நாளில் குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.

தமிழர்களின் மாதம் சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியபகவான் ராசி மண்டலத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே முதல் மாதம். என்றாலும் மாதங்களின் பெயர்கள் பெரும்பாலும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை.

எந்த நட்சத்திர நாளில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே பெரும்பாலும் அந்த மாதத்தின் பெயராக இருக்கும். குறிப்பாக முதல் மாதத்தில் பௌர்ணமி வரும் நட்சத்திரம் சித்திரை. ஆதலால் அந்த மாதம் சித்திரை எனப்பட்டது.

நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களாகக் கொண்ட தமிழர்கள், சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடினார்கள். திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராசராச சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தொன்றுதொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அறியமுடியும்.

சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நிகழும் நாள் இது. அதனால் அந்த எழிலைக்காணவே பலரும் கன்னியாகுமரிக்குச் செல்வது உண்டு. இந்த நாளில்தான் அழகர் ஆற்றில் இறங்குவார். மக்கள் வைகையின் நதிக்கரை ஓரங்களில் எல்லாம் விழாக் கொண்டாடுவார்கள். சித்ரா பௌர்ணமியன்று மதுரைகள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.

சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்பு நிறைந்த சித்ரா பௌர்ணமியின் விசேஷங்களில் ஒன்று சித்ரகுப்த வழிபாடு. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால் அவருக்குச் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளிய முறையில் சிவனருளை அடைய வகை செய்வார் என்பது நம்பிக்கை. இந்த நாளில் அந்தக் காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், ‘சித்ரகுப்தன் படி அளக்க…’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து மாலையில் பூஜை செய்வதும் விசேஷம்.

 

இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here