50 நாட்களுக்குப் பிறகு திருச்சி – துபாய் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்: பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் நிம்மதி!

திருச்சி:

ளைகுடா நாடுகளில் நிலவி வந்த போர்ப் பதற்றம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சி – துபாய் இடையேயான நேரடி விமானச் சேவை, சுமார் 50 நாட்களுக்குப் பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தென்தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இது குறித்துத் திருச்சி அனைத்துலக விமான நிலைய இயக்குநர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது துபாய் விமானச் சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தச் சேவையானது முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தற்காலிக அட்டவணையின் கீழ் இயக்கப்படும். அத்தோடு அபுதாபி, ஷார்ஜா போன்ற பிற வளைகுடா நகரங்களுக்கான சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அவை குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விமானச் சேவை இல்லாத காலத்தில், பயணிகள் சென்னை அல்லது கொழும்பு வழியாகச் செல்ல வேண்டியிருந்ததால் கூடுதல் செலவும் நேர விரயமும் ஏற்பட்டது.

திருச்சியிலிருந்து துபாய்க்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை ஏற்றுமதி செய்யும் வணிகர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், தேக்கமடைந்திருந்த வர்த்தகம் மீண்டும் சூடுபிடிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருச்சி – துபாய் விமானச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழகத் தொழிலாளர்களின் குடும்பங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here