–முதல்வர் சௌ கொன் இயோ தகவல்
பினாங்கு நிலப்பரப்பின் 2,300 ஏக்கர் பரப்பளவில், தீவு ஏ-வில் 700 ஏக்கர் நிலம் பசுமை தொழில்நுட்ப பூங்காவாக உருமாற்றம் காணும் என மாநில முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார்.
மாநில அரசு எஸ்.ஆர்.எஸ் கூட்டமைப்புடன் ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இணக்கம் கொண்டுள்ளது. தனியார் நிதி முயற்சியின் கீழ் மற்றுமோர் ஒப்பந்தம் கமுடா பொறியியல் நிறுவனத்துடன் கையெழுத்திட்டு ஏறக்குறைய 1,200 ஏக்கர் பரப்பளவில் தீவு ஏ-வின் முதல் கட்ட நில மீட்புத் திட்டம் தொடங்கப்படும்.
பினாங்கு அரசாங்கத்தின் சார்பாக பினாங்கு உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சென் பெர்ஹாட் நிறுவனம், எஸ்.ஆர்.எஸ் கொன்சோட்டியர்டியம் நிறுவனத்துடன் ஒரு கூட்டு முயற்சித்திட்டத்தில் தீவு ஏ நில மீட்புத் திட்டத்தில் பங்கேற்கும்.
தயாரிப்பு ஆராய்ச்சி, அத்துடன் பசுமை தொழில்நுட்ப பூங்காவிற்கான வடிவமைப்பு, மேம்பாட்டு முதலீடுகள் உள்ளிட்ட முக்கிய ‘அப்ஸ்ட்ரீம்’ மதிப்பு கொண்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்த உத்தேசிப்பதாக சௌ கூறினார்.
இத்தகைய முதலீடுகள் சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு இது திறன்மிக்க தொழிலாளர்களை ஈர்க்கும். தீவு ஏ-வில் பசுமை தொழில்நுட்ப பூங்கா உருவாக்குவதன் மூலம் பினாங்கு வட்டார தொழில்துறை மையமாக உருமாற்றம் காணும் என்று இன்வெஸ்ட் பினாங்கு ஏற்பாடு செய்த ‘பினாங்கு: ஒரு நிலையான முதலீடு இடம்’ குறித்த மெய்நிகர் உரையாடல் அமர்வின் கேள்வி பதில் அங்கத்தில் சௌ கொன் இயோ இவ்வாறு கூறினார்.