நீதியின் கண்கள் திறக்கப்படும்

கணபதி மரணம்சீரணிக்க முடியாத தருணம்

போலீஸ் தடுப்புக் காவலில் திடீர் மரணம் எய்துபவர்களுள் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை மூன்று கோடியே 20 லட்சம். இந்தியர்கள் கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர். ஆனால், போலீஸ் லோக்காப் மரணங்களைப் பொறுத்தவரை இந்தியர்களின் எண்ணிக்கை 55 விழுக்காடாக இருக்கிறது என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

மிகக் கொடூரமான முறையில் அவர்கள் தாக்கப்பட்டு மரணம் அடைவது ஜீரணிக்கவே முடியாத சம்பவங்களாக இருக்கின்றன. இது இந்திய சமுதாயம் வாங்கி வந்த வரமா? சாபக்கேடா? இந்தியர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்?

அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் என்ற ஒரு கறுப்பினத்து இளைஞரை சாலையில் அழுத்திப் பிடித்து கழுத்தில் கால்வைத்து மிதித்து மிகக் கொடூரமாகக் கொன்றார் ஒரு வெள்ளைக்கார போலீஸ்காரர்.

ஒரு கறுப்பினத்தவருக்கு எதிரான இக்கொலைவெறித் தாக்குதல் உலகம் முழுவதும் பற்றி எரிந்தது. மனித இனத்திற்கு ஆதரவாக உலக மக்களே ஒன்று திரண்டு நியாயம் கேட்டுப் போராடினர் ஒரே இதயமாக; ஒரே குரலாக இக்கொடூரத்தைக் கண்டித்தனர்.

அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இச்சம்பவத்தைக் கண்டித்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட அப்போலீஸ்காரர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு கொலைக் குற்றச்சாட்டும்  சுமத்தப்பட்டது.

குகன் ஆனந்தன் (2009), சுகுமாரன் செல்லதுரை (2013), கருணாநிதி (2013), தர்மேந்திரன் நாராயணசாமி (2013), பாலமுருகன் சுப்பையா (2017) தொடங்கி மிக அண்மையில் ஏ. கணபதி போலீஸ் தடுப்புக்காவலில் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்திருக்கிறார்.

போலீஸ் கொடுஞ்செயல் மிகக் கடுமையான விவகாரமாக மாறி வருகிறது. இது இவர்களுக்கு நடந்திருக்கும்போது நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம்.

12 நாட்கள் போலீஸ் லோக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணபதி ரப்பர் குழாயால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தொடையில் சதை கிழியும் அளவுக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன.

இவர்கள் குற்றவாளிகளாகக்கூட தீர்ப்புச் சொல்லப்பட்டிருந்தாலும் இவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். இதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

நீதிக்காகப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் படையின் உயர்நெறி ஒழுக்கம், வெளிப்படைத் தன்மை, நேர்மை போன்றவற்றை அமல்படுத்தக் கோரி உரக்கக் குரல் எழுப்ப வேண்டிய காலமும் கனிந்துவிட்டது.

ஐபிசிஎம்சி (ஐகஇ–இ) எனப்படும் சுயேச்ட்சை போலீஸ் ஒழுக்கக்கேடு நடத்தைகள் புகார்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற குரல் இனி ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அரசாங்கம் ஐபிசிஎம்சி-ஐ இனியும் காலத் தாமதமின்றி விரைந்து அமைக்க வேண்டும். காரணங்கள் இனியும் வேண்டாம். போலீஸ் கொடுமைகளுக்கு எதிராக புகார்கள் குவிந்திருப்பினும் அதனைத் துப்புத்துலக்கி நியாயத்தை வெளியில் கொணர்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது ஒட்டுமொத்த மலேசியர்களின் பெருங்குறையாக இருந்து வருகிறது.

போலீஸ் படை மீதான நம்பிக்கை கரைந்து போகாமல் இருக்க இந்த ஐபிசிஎம்சி அவசியம் என்பதை அரசாங்கம் மனதார உணர வேண்டும்.

கணபதி பிப்ரவரி 24 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை போலீஸ் தடுப்புக் காவலில் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் ரப்பர் குழாயால் அவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

கால் தொடைப் பகுதியில் சதை பிய்ந்துப்போகும் அளவில் காயம் ஏற்பட்டது. செலாயாங் மருத்துவமனை தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் கணபதி சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைகைள் பலன் அளிக்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் உயிரிழந்தார்.

அவர் உடலில் காணப்பட்ட வீக்கங்கள், காயங்கள் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்களை இருக்கின்றன.

கணபதிக்கு நியாயம் கிடைக்குமா அல்லது வழக்கம்போல் அதுவும் ஒரு சாதாரண மரணமாகவே வகைப்படுத்தப்படுமா?

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here