அடெண்டம்: அன்வார் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, லத்திஃபா கோயா ஒரு தலைப்பட்சமாக பேசக் கூடாது – சிவராசா

அடெண்டம் விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தொடர்புப்படுத்தி பேசுவதும் விமர்சிப்பதும் எந்த வகையிலும் நியாமில்லை. அன்வார் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் வலியுறுத்துவதும் அறிவுக்கு எட்டவில்லை என்று பிரபல வழக்கறிஞர் ஆர். சிவராசா கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பின் ஒரு பகுதியாக அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்ட கூடுதல் உத்தரவு
(அடெண்டம்) உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு இதன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில் வெளியில் கருத்து சொல்வதும் விமர்சனம் செய்வதும் நீதிமன்ற நிந்தனையாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு, புவிசார் அரசியல் போன்ற பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர்க் கட்சிகள் இதில் அரசியல் நடத்துவது ஜனநாயகம் அல்ல.

இது மட்டும் அன்றி ஆசியானுக்கு தலைமை ஏற்றிருக்கும் மலேசியா ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் உச்சநிலை மாநாடு, அதனை அடுத்து ஆசியான் உச்சநிலை மாநாடும் கோலாலம்பூரில் நடத்த இருக்கிறது.

ஆசியான், உலகத் தலைவர்கள் நாட்டிற்கு வரவுள்ளனர். மேலும் நாட்டின் 13 ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். பிரதமரும் அரசாங்கமும் இவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டி இருக்கிறது.

இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் நேரமும் இல்லை அவசியமும் இல்லை என்று சுங்கை பூலோ தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் முன்னாள் உதவித் தலைவருமான சிவராசா குறிப்பிட்டார்.

அடெண்டம் குறித்து நாடாளுமன்ற மக்களவையிலும் பிரதமர் பல முறை விளக்கமும் தந்து விட்டார். ஆனால் எதிர்க்கட்சியினர் விடாப்பிடியாக அதனைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றனர். வேண்டுமென்றே அடெண்டம் விவகாரத்தை தங்களின் அரசியல் மூலதனமாக பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க் கட்சியினர் அதற்குரிய ஆதாரங்களை இதுவரை முன் வைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

லத்திஃபாவின் ஒருதலைப்பட்ச நிலைப்பாடு கூடாது.உயர் நிலை நீதிபதிகள் நியமனத்தில் தம்முடைய தலையீடு அறவே இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் மீண்டும் மறுத்து வருகிறார். இந்நிலையில் லத்திஃபா ஒருதலைப்பட்சமாக விமர்சனம் செய்யக் கூடாது. மாறாக தலையீடு இருக்கிறது என்பதற்கு தக்க ஆதாரங்களை அவர் முன் வைக்க வேண்டும்.

மூன்றாம் தரப்பினரின் அடிப்படையற்ற நிலை ப்பாட்டிற்கு இவர் ஒத்து ஊதக் கூடாது என்று சிவராசா வலியுறுத்தினார்.

அடெண்டம் மீதான வழக்கு தற்போது நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஒரு பிரபலமான மனித உரிமை வழக்கறிஞரான லத்திஃபாவுக்கு இந்த நியாயம் கூடவா தெரியாது என்று சிவராசா கேள்வி எழுப்பினார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here