எம்சிஓ 3.0 – தாங்குமா நாடு!

கட்டுப்பாடு இல்லாவிட்டால் கெட்டுப்போகும் வாழக்கை!

இன்னொரு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (எம்சிஓ 3.0) நாடு தாங்காது. பொருளாதாரத்திற்குப் பெரும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பந்தாடி விடும்.

குறிப்பாக கடந்த கால அனுபவங்கள் பி40 பிரிவைச் சேர்ந்த மக்களின் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அன்றாட சம்பளத்திற்கு வேலை செய்வோரும் சாதாரணத் தொழில்துறைகளும் சொல்லொண்ணா துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை இழந்து, வருமானம் இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கே அல்லாடிய காலத்தை – வலியை அவ்வளவு எளிதில் நம் நினைவுகளில் இருந்து அழித்து விட முடியாது.

கொரோனா தொற்றுக் கிருமி சங்கிலித் தொடரை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் அறுத்தெறிய முடியாது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் – குடிமக்களாக இருக்கட்டும் அந்நியத் தொழிலாளர்களாக இருக்கட்டும் சட்டவிரோதக் குடியேறிகளாக இருக்கட்டும் – ஒரே இதயமாக ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும்.

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அசாங்க நிறுவனங்கள், தனியார் துறைகள், சாமானியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் கரங்கோத்தால் மட்டுமே அந்தக் கொரோனா தொற்றுக் கிருமி சங்கிலித் தொடரை அறுத்தெறிய முடியும்.

சுய ஒழுக்க நெறிகளும் அரசாங்கம் விதித்திருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளும் உயிருக்கு சமமாக மதித்துப் பின்பற்றப்பட்டால் – அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டால் பேராபத்துகளில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அமைச்சருக்கு ஒரு சட்டம், சாமானியனுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடு அறவே கூடாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதுவே  சாசனமாகவும் மதிக்கப்பட வேண்டும்.

கோவிட்-19 தொற்றுப் பரவல் புதிய உச்சத்தை அடைந்து நாளுக்கு நாள் அதிகரித்து கிட்டத்தட்ட 4 ஆயிரத்தைத் தொடவிருக்கிறது. மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அவசர சிகிச்சைபை் பிரிவில் சேர்க்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

விதிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபி விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படாவிடில் நிலைமை கட்டுமீறிவிடும் என்று சுகாதாரத்துறை முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் (மருத்துவம்) டத்தோ டாக்டர் ரொஹாய்ஸாட் எச்சரித்திருப்பதை அலட்சியப்படுத்தக்கூடாது.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியப்படுத்துவது, சட்ட நடைமுறைகளை மீறுவது, சுய ஒழுக்கமின்மை போன்றவைதான் கொரோனா பரவல் திடீர் அதிகரிப்புக்கு மூலக் காரணம் என்பதையும் அவர் தெளிவாகச்  சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கூடல் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று மைக் வைத்து கத்தினாலும் பொதுமக்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதும் விருப்பம்போல் நடந்து கொள்வதும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்குச் சமம். அதைத்தான் நாம் இப்போது நாளும் பார்த்து வருகிறோம்.

எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்ற நினைப்பில் நம்முடைய சுய பொறுப்புடைமைகளைக் கோட்டை விடுவது நமக்குத்தான் கேடு. அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம், ஏராளம்.

நிலைமை கட்டுமீறிப் போனால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது.

கோவிட்-19 தொற்றால் பெரும் பாதிப்புக்கு உட்பட்ட பகுதிகள் இந்த ஆணையின் கீழ் வைக்கப்படலாம். அப்படி நடந்தால் பாதிப்பு மக்களுக்குத்தான்.

சுவற்றில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது – கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால் கொரோனா ஆபத்து அலாரம் ஒலிக்கத் தொடங்கி விடும்! மக்களின் மெத்தனப் போக்கே கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதற்குக் காரணம்.

அதே சமயத்தில் விதிமீறல்களுக்கான அபராதம் என்று வருகின்றபோது அமைச்சர் முதல் சாமானியன் வரை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது காலத்தின் கட்டாயம்.

இந்தச் சிரமமான; சவால்கள் நிறைந்த காலத்தில் ஒன்றுபடுவோம், விதிமுறைகளை உயிர்மூச்சாகக் கருதி கடைப்பிடிப்போம், கொரோனா தொற்று சங்கிலித் தொடரை சுக்குநூறாகத் தகர்த்தெறிவோம்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here