–வாசம் இழக்குமா வசந்தம்
ஆர்டிஎம் – மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் மையம் ஆகும். முழுக்க முழுக்க மக்கள் வரிப்பணத்தில் தானே செயல்படுகிறது!
ஏற்பாட்டாளர்கள் (விளம்பரங்கள்) மூலம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.
ஆனால், இன்று புதுப்புதுத் தகவல்களைப் பெற்று வருகிறோம். ஸ்பான்சர்கள் இன்றி இனி தமிழ் நிகழ்ச்சிகள் ஆர்டிஎம் 1, ஆர்டிஎம்2 அலைவரிசகைளில் இடம்பெறாது என்பது கிட்டத்தட்ட உண்மையாகி வருகிறது.
ஆர்டிஎம் 2 அலைவரிசையில் ஆஸ்ட்ரோ அறிமுகத்திற்கு முன்பாக இந்திய – தமிழ் நிகழ்ச்சிகளின் ஊற்றாகத் திகழ்ந்தது. தமிழ் – இந்தி திரைப்படங்கள், வாராந்திர சந்திப்பு நிகழ்ச்சிகள், மகளிருக்கான சிறப்புப் படைப்புகள், நாடகங்கள், கலந்துரையாடல்கள் என்று வாரம் முழுவதும் தமிழ் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருந்தன
தீபாவளிக்கு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை வரிசைகட்டி நிற்கும்.
தமிழர்கள் – இந்தியர்களின் அன்றைய பொழுதுபோக்கு ஆர்டிஎம் 2 அலைவரிசைகள் மட்டுமே. பின்னாளில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக இயற்கை மரணம் எய்தின – காணாமல் போயின.
அண்மைக் காலம் வரை ஆர்டிஎம் 2இல் தமிழ்ச் செய்திகள் , வாராந்திர சந்திப்பு – கலந்துரையாடல் நிகழ்ச்சி வசந்தம் நிகழ்ச்சி மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இப்போது வசந்தத்திற்கும் சோதனை!
ஆஸ்ட்ரோவில் இணைக்கப்பட்டுள்ள ஓகே (OKEY) அலைவரிசையில் அதன் ஒளிபரப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கான ஒளிவாங்கி இல்லை என்றால் அதனைப் பார்க்க இயலாது.
சபா, சரவாக் மக்களுக்காக குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்காக இந்த அலைவரிசை உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆகக்கடைசியாக மலேசிய இந்தியர்களும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏன் இந்த விபரீத முடிவு என்ற கேள்விக்கு – தமிழ் நிகழ்ச்சிக்கு விளம்பர ஸ்பான்சர்கள் இல்லை. அதனால் படைக்க இயலாது என்று நிர்வாகத் தரப்பில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
மக்களுக்கான அரசாங்க அதிகாரப்பூர்வ தகவல் ஊடகமான ஆர்டிஎம் 2 அலைவரிசை விளம்பரங்கள் தரும் பணத்தில்தான் நடத்தப்பட வேண்டியுள்ளது என்ற தகவல் உண்மையானால், இதுநாள் வரையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்டு வந்ததே – இப்போது மட்டும் என்னவானது?
தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் இந்த நிபந்தனையா, மற்ற மொழி நிகழ்ச்சிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடு உள்ளதா? இந்தியர்களுக்கும் – தமிழர்களுக்கும் இனி ஆர்டிஎம் அலைவரிசகைளில் இடம் இல்லையா?
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இவ்வளவுதான் மரியாதையா? கைவைப்பதற்கு தமிழ் நிகழ்ச்சிகள்தான் கிடைத்தனவா?
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டார்களே! நம் தலைவர்கள் கேட்பார்களா? பறிபோன நிகழ்ச்சிகளைத் திரும்பக் கொண்டு வருவார்களா?
அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தம்முடைய அமைச்சரவை சகாவான தொடர்பு, பல்லூடக, தகவல் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லாவுடன் விரைந்து பேசி வசந்தத்தையும் வாராந்திர நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளையும் கொண்டு வர வேண்டும்.