சவால்மிக்கதாக மாறுகிறதா தனிமைப்படுத்துதல்!

செர்டாங் மருத்துமனை நிரம்புகிறது!

கோலாலம்பூர்-
செர்டாங்கிலுள்ள தனிமைப்படுத்துதல் மையத்தில் நிலைமை சவால்மிக்கதாக உள்ளது என்று சிலாங்கூர் சுகாதாரத்துறை கூறியிருக்கின்றது.

அந்த மையத்தில் 3ஆவது பிரிவு கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இதற்குக் காரணம்.

கடந்த ஜனவரி மாத வாக்கில் 3ஆவது பிரிவு நோயாளிகளுக்காக எம்ஏஇபிஎஸ் எனப்படும் செர்டாங்கிலுள்ள மையத்தில் 60 கட்டில்களே வைக்கப்பட்டிருந்தன என்று அந்தத்துறை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், கடந்த 5 மாதங்களில் இந்த நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரம் விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துவிட்டது. தற்போது அங்குள்ள முன்களப் பணியாளர்கள் 757 நோயாளிகளைக் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அது கூறியது.

ஆகவே, கோவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் போதிய வசதிகள் இல்லை எனவும் நெரிசல் நிலவுவதாகவும் சமூக வலைத்தளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.

அங்குள்ள நிலைமை பாதுகாப்பானதாக இல்லை என்று நோயாளிகளுள் ஒருவரான அல்வின் டேவ் சிங் ஊடகச்செய்தியில்  கூறியிருக்கிறார்.

அங்குள்ள நோயாளிகள் எஸ்ஓபி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இது பாதுகாப்பானது அல்ல.

இது உகந்த சுழ்நிலையை ஏற்படுத்தப் போவதில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் சுகாதார சேவைக்கு ஆதரவாக செர்டாங் தனிமைப்படுத்துதல் மையத்தில் கட்டில்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த திட்டமுள்ளது என்று சிலாங்கூர் சுகாதாரத்துறை  தெரிவித்தது.

3ஆவது பிரிவு நோயாளிகள் தற்காலிக ஐசியூ வார்டு அருகே மண்டபத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இதன்மூலம் அவர்களை இன்னும் அணுக்கமாகக் கண்காணிக்க முடியும். அதே சமயம் உடல்நிலை சீரடைந்த முதலாவது, இரண்டாவது பிரிவு நோயாளிகள் டேவான் டிஜி எனும் இடத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என்று அது கூறியது.
அந்நிய நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் இருந்து மலேசியாவைச் சேர்ந்த நோயாளிகளைத் தனியாகப் பிரிக்க அதிகாரிகள் முடிந்த அளவு முயற்சி செய்துவருகின்றனர் என்றும் அத்துறை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here