சிங்கப்பூர்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா குழந்தைகள் மத்தியில் அதிகம் பரவுவதால், சிங்கப்பூர் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு நேற்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்புகளில் இதுதான் அதிகமாகும்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வகை தற்போது சிங்கப்பூரிலும் பரவி வருகிறது. இந்த B.1.617 உருமாறிய கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தற்போது வரை உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் 18+ வயதினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், B.1.617 உருமாறிய கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூர் குறிப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதுக்குக் குறைவானவர்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளி கல்லூரிகள் மூடல்
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் இந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் வழியே மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.