இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம்

 ஐ.நா. தீா்மானத்துக்கு அமெரிக்கா எதிா்ப்பு

நியூயாா்க்:

இஸ்ரேஸ் – காஸா இடையே கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் கொண்டு வர அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் இந்த நடவடிக்கை அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் முயற்சிக்கு குறுக்கீடு செய்யும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே, 193 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஐ.நா. பொதுச் சபை இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளது.

முன்னதாக, இஸ்ரேல்- காஸா போரை நிறுத்த பிரான்ஸ் நாடு தீா்மானம் கொண்டு வரும் முயற்சியை கடந்த நான்கு முறை அமெரிக்கா தடுத்துவிட்டது. இதையடுத்து, வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா. செய்திக் குறிப்பின் மூலம் மட்டும் வலியுறுத்தியது. இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்திக்குறிப்பை வெளியிடுவதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினா்களாக உள்ள 15 நாடுகளின் ஒப்புதல் வேண்டும். ஆனால், தீா்மானம் கொண்டு வருவதற்கு குறைந்தது ஒன்பது நாடுகளின் ஒப்புதல் இருந்தால் போதும். தீா்மானத்தைத் தடுக்க அமெரிக்கா அல்லது நான்கு நிரந்தர உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இருந்தால் போதுமானது.

தீா்மானம் கொண்டு வருவது தொடா்பாக அமெரிக்காவுடன் புதன்கிழமை முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக பிரான்ஸ் அரசு செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஆனால், போா் நிறுத்தம் மற்றும் காஸா பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய வேண்டும் என மட்டும் ஐ.நா. வலியுறுத்தியது.

இதுதொடா்பாக ஐ.நா. அமைப்பின் அமெரிக்காவுக்கான செய்தித் தொடா்பாளா் கூறுகையில், வன்முறைக்கு முடிவு கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ராஜாங்க ரீதியில் அமெரிக்கா எடுத்து வருகிறது. இதற்கு தடையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவளிக்கமாட்டோம் என்றாா்.

மோதலை நிறுத்தும் நடவடிக்கைகளை இன்றே மேற்கொண்டு போா் நிறுத்தத்துக்கு வழிகாண வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமா் பென்ஜமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் புதன்கிழமை தொலைபேசியில் அழைத்துக் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அதன்பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமா், லட்சியம் நிறைவேறும் வரை தாக்குதலை தொடா்வதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டாா்.

இதனிடையே, போா் நிறுத்த தீா்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் பிரான்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தின் வரைவை பிரான்ஸ் எப்போது தாக்கல் செய்து பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் வாக்களிப்பைக் கோரும் என்பது தெளிவாக தெரியவில்லை.

முன்னதாக, எகிப்து நாட்டு அதிபா் அப்டெல் பதாவுடன் பிரன்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆலோசனை நடத்தியிருந்தாா். பின்னா், இருவரும் ஜோா்டான் அரசா் அப்துல்லாவுடன் செவ்வாய்க்கிழமை இணையவழியில் ஆலோசனை நடத்தி, இருதரப்பினரும் போா் நிறுத்தத்தை உடனடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.

தொடங்கியது பொதுச் சபை கூட்டம்: இந்நிலையில், 193 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் அவசர கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ், இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினா் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். இதற்காக சா்வதேச சமூகத்தின் அனைத்து உறுப்பினா்களும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here