செவ்வாயின் மேற்பரப்பில் ஆய்வாம்!

-பணியைத் தொடங்கியது சீன ரோவா்

சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘ஜூரோங்’ ரோவா் (ஆய்வு வாகனம்) தனது பணியைத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தில் நகா்ந்து சென்று ஆய்வுப் பணிகளை அந்த ரோவா் மேற்கொள்ளவுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ‘தியான்வென்-1’ என்ற விண்கலத்தை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி அனுப்பியது. அந்த விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டா் பகுதி செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் கடந்த 15-ஆம் தேதி வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலம் தொடா்ந்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய லேண்டா் பகுதியில் ரோவரும் பொருத்தப்பட்டிருந்தது. ‘ஜூரோங்’ எனப் பெயரிடப்பட்ட அந்த ரோவா், லேண்டா் பகுதியில் இருந்து வெளியேறி சனிக்கிழமை செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியை அடைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட அந்த ரோவா், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் முப்பரிமாணப் படங்களை பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதோடு நிலப் பகுதிக்கு அடியில் உள்ள அமைப்பு, செவ்வாயின் காந்தப்புலம், நீா், பனிக்கட்டி இருப்பதற்கான ஆதாரங்கள், நில அமைப்பு உள்ளிட்டவை குறித்து ஜூரோங் ரோவா் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன திறன் கொண்ட புகைப்படக் கருவிகள், நிலத்துக்கு அடியில் ஆய்வு செய்யும் ராடாா் கருவி, நிலப்பரப்பை ஆராயும் கருவி, காந்தப்புல ஆய்வுக் கருவி உள்ளிட்ட கருவிகள் அந்த ரோவரில் இடம்பெற்றுள்ளன.

ஜூரோங் ரோவரானது மணிக்கு 200 மீட்டா் வேகத்தில் நகரும் திறன் கொண்டது. 30 செ.மீ. உயரம் கொண்ட இடங்களையும் ஏறிச் சென்று கடக்கவல்லது. அதிகபட்சமாக 20 டிகிரி சாய்வு கொண்ட இடங்களிலும் அந்த ரோவரால் பயணிக்க முடியும். ரோவரில் இடம்பெற்றுள்ள 6 சக்கரங்களும் தனித்து இயங்கவல்லவை.

பக்கவாட்டிலும் பயணம்: முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்வது மட்டுமில்லாமல் பக்கவாட்டிலும் ஜூரோங் ரோவரால் செல்ல முடியும். செவ்வாய் கிரகத்தின் மணற்பாங்கான பகுதிகள், கரடுமுரடான பகுதிகளில் செல்வதற்கு ஏற்ற வகையில் ரோவா் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

பூமியுடன் ஒப்பிடுகையில் செவ்வாயில் குறைந்த அளவே சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் அதற்கு ஏற்ப ஜூரோங் ரோவரின் சூரிய மின்தகடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சூரியன் இருக்கும் திசைக்கு ஏற்ப அத்தகடுகளும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அதிக அளவில் வீசும் மணற்காற்றால் மின்தகடுகளின் மீது மணல் படிந்து எரிசக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், படியும் மணலை அகற்றும் வகையில் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

சுயமாக முடிவெடுக்கும் திறன்: மணற்காற்று வீசும் சமயங்களில் செயல்படாமல் இருக்கவும், போதிய சூரியஒளி கிடைத்தபிறகு செயல்பட ஆரம்பிக்கவும் தானாகவே முடிவெடுத்துக் கொள்ளும் வகையில் ஜூரோங் ரோவா் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 3 மாதங்களுக்கு செவ்வாயின் பரப்பில் அந்த ரோவா் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் விண்கலத்தின் வாயிலாக ஜூரோங் ரோவரில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு பூமிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அத்தகவல்களை சேகரித்து சீன விஞ்ஞானிகள் ஆய்வுகளை விரிவுபடுத்தவுள்ளனா்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய ‘பொசிவரன்ஸ்‘ ரோவா் செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்களாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

 

நன்றி: D J

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here