பேங்காக்:
தாய் தன் அருகில் அமர்ந்து கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், தவழ்ந்து வந்த நிஜப் பாம்புக் குட்டி ஒன்றை விளையாட்டுப் பொம்மை என நினைத்துக் குழந்தை ஒன்று கையில் பிடித்துச் சுழற்றிய அதிர்ச்சிச் சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.
தாய்லாந்தின் பதும் தானி (Pathum Thani) மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் அண்மையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி (CCTV) காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களை நெஞ்சம் பதற வைத்துள்ளது.
அந்தக் காணொளியில், வீட்டில் துணிகளை மடித்து வைத்த பின்னர், அந்தப் பெண்மணி சற்று ஓய்வெடுப்பதற்காகத் தனது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு மிக அருகில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அவரது சிறு வயது மகன், திடீரென அங்குத் தவழ்ந்து வந்த ஒரு குட்டிப் பாம்பை அசால்ட்டாகக் கையில் எடுத்துப் பொம்மையைப் போலப் பலமுறை காற்றில் சுழற்றியுள்ளான்.
திடீரெனத் தனது பிள்ளை கையில் ஏதோ ஒன்றைச் சுழற்றுவதைக் கண்டு போனில் இருந்து பார்வையைத் திருப்பிய அந்தத் தாய், அது உயிருள்ள பாம்பு என்பதை உணர்ந்து பயத்தில் மரண அலறல் இட்டுள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாகப் பாய்ந்து சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். தாயின் அலறலைக் கேட்டுப் பயந்த அந்தக் குழந்தையும் தன் கையில் இருந்த பாம்பைக் கீழே போட்டது. அங்கிருந்து தப்பிய அந்த பாம்பு, அருகில் இருந்த பொம்மைக் குவியல்களுக்கு நடுவே சென்று ஒளிந்து கொண்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்மணி உடனடியாக மீட்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துப் பாம்பைப் பிடிக்க உதவி கோரினார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொம்மைகளுக்கு இடையே மறைந்திருந்த குட்டிப் பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர்.
வீட்டின் கதவு இடுக்கின் வழியாக அந்தப் பாம்புக் குட்டி வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அந்தக் குழந்தைக்கு எவ்விதப் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் அருகில் இருக்கும்போது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.




















