கோவிட்-19 இறப்புகளுக்கு நட்மாவின் வெ. 5,000

மரண சகாய நிதி

கோலாலம்பூர்-
கோவிட்-19 கிருமித் தொற்றால் மரணம் எய்துகின்றவர்களின் நல்லடக்கச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு 5,000 வெள்ளி மரண சகாய நிதி வழங்கப்படுகிறது. இச்சிறப்பு உதவி ஒரே முறை மட்டுமே வழங்கப்படும் என்று தேசியப் பேரிடர் நிர்வாக ஏஜென்ஸி (நட்மா – NADMA) தெரிவித்துள்ளது.

மரணமுற்றவரின் வாரிசு இந்த உதவித் தொகையைப் பெறுவர். சம்பந்தப்பட்டவர் கோவிட்-19 கிருமித் தொற்றால்தான் இறந்தார் என்பதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்திருந்தால் மட்டுமே வாரிசுதாரர் இச்சிறப்பு நிதி உதவிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

இறந்தவர் மலேசியராக இருக்க வேண்டியது நிபந்தனைகளில் ஒன்றாகும். ஒரு குடும்பத்தில் ஒரு வாரிசு மட்டுமே உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்திடல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் இருந்து முதல் முதலாக செய்யப்பட்ட விண்ணப்பத்தை மட்டுமே NADMA பரிசீலிக்கும்.
NADMA  போர்ட்டலில் உள்ள விண்ணப்பப் பாரத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அரைகுறை தகவலைக் கொண்டிருக்கும் மனுபாரங்கள் நிராகரிக்கப்படும்.
* அந்த மனுபாரத்தோடு கோவிட்-19 மரணம் என்பதை உறுதி செய்யும் மருத்துவனையின் அதிகாரப்பூர்வ  சான்றிதழ்,
* இறப்புச் சான்றிதழ்,
* இறந்தவரின் வாரிசு (மனுதாரர்) அடையாள அட்டை நகல்,
* மனுதாரரின் வங்கிக் கணக்கு அறிக்கை (செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்) ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட மனுபாரம் அஞ்சல், மின்னஞ்சல், வாட்ஸ்அப் வழி நட்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்

முகவரி

Ketua Pengarah
Agensi Pengurusan Bencana Negara
(NADMA),
Jabatan Perdana Menteri
Aras 7, Blok D5, Kompleks D,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan
62502 Putrajaya.
(U.P.: Sekretariat KWABBN)

[email protected]

அல்லது
+6011&13218056

30 நாட்களில் உதவித்தொகை
முழுமையான விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 30 வேலை நாட்களில் தகுதிபெற்ற வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் மின்னியல் பட்டுவாடா வழி சிறப்பு உதவித் தொகை நேரடியாக சேர்க்கப்படும்.
நிபந்தனைகளுக்கு உட்படாத மனுபாரங்களை நிராகரிக்கும் முழு உரிமையும் அதிகாரமும் நட்மாவுக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வதில் திருகுத் தாளங்கள் மற்றும் போலியான தகவல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சுய லாபத்திற்காக ஏமாற்றி இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது 2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) சட்டம் பிரிவு 18 கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை, ங்ம்பந்தப்பட்ட தொகைக்கு ஈடான 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
ஏமாற்றும் நோக்கத்தில் போலி ஆவணங்களை இணைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பீனல் கோட் பிரிவு 420 மற்றும் 468 கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஓராண்டுக்குக் குறையாத 10 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று நட்மா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் நட்மாவின் முடிவே இறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here