எவரெஸ்ட் உச்சியை அடைந்த மாற்றுத்திறனாளி

சிகரம் தொடு  முயற்சியில் சாதித்தார் !

நேபாளத்தின் வழியாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டிருக்கிறார் 46 வயது நிரம்பிய சீனர். எவரஸ்ட் உச்சியை அடைவதே பெரும் சாதனைதான் என்றாலும், பார்வை மாற்றுத்திறனாளியான இவர் இரட்டைச் சாதனை செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஜேங் ஹாங் என்ற அந்த நபர் தனது வெற்றிப்பயணம் குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “உங்களுக்கு உடலில் குறைபாடு இருக்கலாம், இல்லை நீங்கள் முற்றிலும் சாதாரணமானவராக இருக்கலாம். உங்களுக்கு பார்வை சவால் இருக்கலாம், கை, கால் உள்ளிட்ட அங்கத்தில் ஏதேனும் குறையிருக்கலாம். ஆனால் உங்களின் மனம் திடமானதாக இருந்தால் மட்டுமே போதுமானது.

மற்றவர்கள் முடியாது எனச் சொல்லும் விஷயங்களைக் கூட நீங்கள் முடித்துக் காட்டலாம்” என்றார். 8,849 மீட்டர் உயரம் கொண்ட இமாலய மலையின் எவரஸ்ட் சிகரத்தைஜேங் ஹாங், மே 24 இல் அடைந்தார். அவருடன் மூன்று வழிகாட்டிகள் சென்றனர். தனது இலக்கை அடைந்த ஜேங் ஹாங் கடந்த வியாழக்கிழமை மீண்டும் பேஸ் கேம்ப்பை அடைந்தார்.

ஹேங் ஜனக் சீனாவின் சோன்கிங் நகரத்தில் பிறந்தார். பிறக்கும்போது இயல்பாகவே இருந்த ஹேங்கின் பார்வை அவரது 21 ஆவது வயதில் பறிபோனது. அவருக்கு குளுக்கோமா என்ற நோய் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு அந்நோய் ஏற்பட்டது. இருப்பினும் எவரஸ்ட் சிகரத்தை எட்ட வேண்டும் என்பது அவரது வேட்கையாக இலக்காக இருந்தது.

அவர் தனது ரோல் மாடல் என அடையாளம் காட்டுவது, அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் வெய்ஹென்மேயர். இவரும் பார்வை சவால் கொண்டவர் தான். கடந்த 2001  ஆம் ஆண்டில் இவர் எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதற்காக அவர் தனது நண்பர் கியாங் ஜியிடம் பயிற்சி பெற்றார்.

அதையே ஊக்கமாகக் கொண்ட ஜேங் ஹாங் தனது வெற்றியை தற்போது நிலைநாட்டியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பார்வை சவால் கொண்ட முதல் ஆசியர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். கொரோனா பெருந்தொற்றால் வெளிநாட்டவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த எவெரஸ்ட் சிகரம் கடந்த ஏப்ரல் முதல் திறந்துவிடப்பட்டது.

பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு இடையேயும் தனது பெருங்கனவை ஜேங் ஹேங் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக ஜேங் ஹாங், “நான் எங்கே நடக்கிறேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் என்னால் ஈர்ப்பு மையத்தைக் கூட உணரமுடியாமல் கீழே விழுந்திருக்கிறேன். கொஞ்சம் பயம் வந்தது. ஆனால், நான் என் மனத்துக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சிரமங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். பிரச்சினைகளும், ஆபத்துகளும் இருந்தன. ஆனால், இவைதான் சிகரம் தொடுவதின் சூட்சமம் என்று புரிந்து கடந்து சென்றேன்” என்று கூறியுள்ளார்”.

தனது வெற்றிக்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், “நான் எவெரஸ்டை அடைந்துவிட்டேன். இத்தருணத்தில், நான் எனது குடும்பத்தினருக்கும், வழிகாட்டிகளுக்கும், ஃபோர்கைண்ட் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏசியன் ட்ரெக்கிங் அமைப்பும் எனது பயணத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இது தொடக்கம் தான். எவெர்ஸ்ட் சிகரத்தின் ஏழு உச்சிகளையும் அடைய விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். #SevenSummits #Everest2021 போன்ற ஹேஷ்டேகுகளை அவர் பயன்படுத்த அது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தனது வெற்றிப் பயணப் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here