இந்தியர்கள் பின்தள்ளப்படுகின்றனரா?

கோவிட்-19 தடுப்பூசி

பதிவில் பாரபட்சமா?

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விவகாரத்தில் இந்தியர்கள் பின்தள்ளப்படுவதாக அண்மைக் காலமாக ஒரு பரவலான அதிருப்தி தலையெடுத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் சிலர் பகிரங்கமாகவே அதனை ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மைசெஜாத்திரா செயலி வழி விண்ணப்பம் செய்துவிட்டு பதிலுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்ற புகார்கள் தற்போது மலைபோல் குவிந்து வருகின்றன.

படித்தவர்களுக்கும் இதே நிலை… படிக்காதவர்களுக்கும் இதே நிலை. நெருப்பின்றி புகையாது. இதுவெல்லாம் பொய் என்று புறந்தள்ளிவிடவும் முடியாது. ஒருவர் இருவர் அல்ல… புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதற்கெல்லாம் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட செயலகம்தான் பதில் அளிக்க வேண்டும். இதற்குப் பொறுப்பேற்றுள்ள அறிவியல், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெளிவான விளக்கத்துடன் இந்தியர்களின் இப்புகாருக்குப் பதில் சொல்ல வேண்டும்.

அண்மையில்கூட தன் பெற்றோருக்குத் தடுப்பூசி போடுவதற்காக வந்த ஒரு பெண்மணி பல மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதால் பெரும் சீற்றம் அடைந்தார்.

அமைச்சர் கைரியிடம் நேருக்கு நேர் வாதத்திலும் ஈடுபட்டார். சரியான விளக்கம் சொல்ல முடியாமல் கைரி தடுமாறி நின்றதையும் காண முடிந்தது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீபோல் பரவியது.

மக்கள் சொல்லும் புகார்கள் அரசல் புரசலாக காதில் வந்து விழுபவை அல்ல. நடப்பதுதான் சினம் கொண்டு பொங்கி எழும்போது எரிமலைபோல் வெடித்து தீப்பிழம்புகளாக வந்துகொட்டுகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இந்தியர்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவ்விவகாரத்தில் சரியான தகவலும் தெளிவும் இல்லாத நிலையில் அவர்கள் என்னதான் செய்வார்கள்… எங்குதான் போவார்கள்? பதிவுசெய்யும் வழிமுறை தெரியாமல் தடுமாறி நிற்பவர்கள்தான் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் யார் உதவுவது?

தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை ஏற்கெனவே ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க தாங்கள் ஓரங்கட்டப்படுகிறோமா என்ற உணர்வு இந்தியர்கள் மத்தியில் தலைதூக்கியிருப்பதை அரசாங்கமும் சமுதாயம் சார்ந்த அரசியல், பொதுநல இயக்கங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

அதேசமயம் கோவிட்-19 தடுப்பூசி பற்றி சமுதாய மக்களுக்கு அச்சம் தரும் அடிப்படையற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதைப் பொறுப்பற்றத் தரப்பினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய நெருக்கடிமிக்க காலகட்டத்தில் இந்தத் தடுப்பூசிதான் மக்களைக் காக்க வல்லது. இது மருந்தல்ல. இக்கொடிய தொற்றுக் கிருமியை எதிர்கொள்ள நமது உடலில் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது ஆகும்.

தடுப்பூசி விவகாரத்தில் மக்களுக்குத்தான் பெரும் குழப்பம் – தடுமாற்றம் என்றால் அரசாங்கமும் குழப்பத்தில்தான் இருக்கிறது.
முதலில் – தங்களுக்கு விருப்பமான கோவிட்-19 தடுப்பூசி வகைகளைத் தேர்வுசெய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்தது,

இப்போது அமைச்சர் கைரி, கோவிட்-19 தடுப்பூசியை மக்கள் தேர்வுசெய்ய முடியாது என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாளும் ஓர் அறிவிப்பு – தகவல்! நாடும் மக்களும் புரியாமல் விழிபிதுங்கி கிடக்கின்றனர். என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது தெரியாமல் நிலைதடுமாறும் அரசாங்கத்தின் போக்கினால் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் பெரும் பின்னடைவில் இருக்கிறது.

நிலைமையைச் சரிசெய்ய வேண்டியவர்களே தடுமாறினால், சாமானியர்களின் நிலைதான் என்ன? ஓடி ஒளியத்தான் செய்வார்கள்.

மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரைகளை அரசாங்கம் இன்னும் வேகப்படுத்த வேண்டும். நாளும் தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் – அவசியம்!

 

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here