வயிற்றில் அடிக்காதீர், வாய்ப்பைப் பறிக்காதீர்!

பூக்கடைகளுக்குத் தடை!இது நியாயமா?

சிரம்பான், ஜூன் 3-
கடந்த ஆண்டு தொடங்கி கோவிட்-19 நெருக்கடியால் ஒவ்வொரு முறையும் எம்சிஓ உத்தரவு பிறப்பிக்கப்படும்போது பூக்கடைகளை மூடுவதில்தான் சிரம்பான் பாசார் பெசார் நிர்வாகம் குறியாக உள்ளது என்று பூக்கடை உரிமையாளர்கள் கொதிப்படைந்தனர்.

நாட்டில் கோவிட்-19 பரவலைத் தடுக்க ஜூன் முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் சிரம்பான் பெரிய மார்க்கெட்டில் உள்ள பூக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று முறையிட்டனர்.

சிரம்பான் பெரிய மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பூக்கடைகளுக்கு மட்டும் தடை விதிப்பது நியாயம்தானா ?

மார்க்கெட்டிற்கு வெளியே சிரம்பான் நகரில் ஏறத்தாழ அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்நிய நாட்டவர்கள் நடத்தும் கடைகள்கூட இயங்குகின்றன.

ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக  நடத்தும் பூக்கடைகளை மட்டும் முடக்குவது எந்த வகையில் நியாயம் என்று அவர்கள் சிரம்பான் மாநகர் மன்றத்திடம் கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு முறையும் எம்சிஓ காலத்தில் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடும்போது பூக்கடைகளை மூடுவது ஏன் என்று கேட்டால், அதற்குப் பூ முக்கியமல்ல என்று பதில் கூறுகிறார்கள்.

பூ முக்கியமல்ல என்று யார் கூறுவது? தினசரி இறை வழிபாட்டிற்கு இந்துக்களும் சீனர்களும் பூக்களைத்தானே பயன்படுத்துகிறார்கள் என்று யோகேஸ்வரி கேள்வி எழுப்பினார்.

பூக்களும் விவசாயம் சார்ந்ததுதான். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்க அனுமதி தரப்படும்போது அதே விவசாயத்தைச் சார்ந்த பூக்களை மட்டும் விற்கக்கூடாது என்றால் அது அநீதி இல்லையா?

தினசரி பல்லாயிரம் வெள்ளி மதிப்புள்ள பூக்களை விற்க முடியாமல் குப்பைகளைல் சேர்க்கும் அவல நிலையை பூ விநியோகஸ்தர்கள் மட்டுமல்லாமல் பூ வியாபாரிகளும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் வருமானத்தை இழந்து சிரமமான சுழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என  கூறினர்.

வருமானம் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தைக் காப்பாற்ற கஞ்சிக்குக்கூட வழி இல்லாமல் போய்விடுமோ என்று அவர்கள் கண்கலங்கினர்.

கடந்த ஆண்டு தொடங்கிய கோவிட்-19 நெருக்கடியால் எம்சிஓ காலத்தில் கோவில்கள் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் திருமணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இதனால் பூ வியாபாரம் சரிவைச் சந்தித்தது .

வீடுகளில் இறை வழிபாட்டிற்காக தினசரி சிலர் பூமாலைகளையும் உதிரிப் பூக்களையும் வாங்குகின்றனர். இறுதிச் சடங்கிற்கு பூமாலைகளையும் பூக்களையும் வாங்கிச் செல்கின்றனர். இதன்மூலம் சிறிய வருமானம்தான் கிடைக்கிறது.

தற்போது முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் செத்துப் பிழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டு வாடகை, வாகனக் கட்டணம், மருத்துவச் செலவு, வீட்டுக்கான செலவு ஆகியவற்றை ஈடுகட்டுவதில் தினசரி மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியை இழந்து விட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அரடசாங்கம் எங்கள் வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்.

எங்களையும் வாழ விடுங்கள் !

நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here