முன்னாடி பீர் இப்போது கஞ்சா ! வேற லெவலில் ஊக்குவிக்கும் அமெரிக்கா!!

அமெரிக்கா: கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முன்னனியில் உள்ளது. அங்கு சுமார் 3.4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிரம்ப் ஆட்சியில் இருந்தபோதே கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிக மோசமான ஒரு நிலையில் இருந்தது. அதன் பின்னரே, ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கை நிர்ணயத்துள்ளதுடன் அதனை அடைவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில்  மாகாணங்களில் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்து வருகின்றது.

இந்த ஊக்குவிப்பு திட்டங்களை முழுமையாக ஆதரிப்பதாக பைடன் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி பல மாகாணங்களும் இலவச பீர், லாட்டரி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் அடுத்த லெவலுக்கே சென்று, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கும் (joints for jabs) திட்டத்திற்கு அம்மாகாண அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 21 வயதைக் கடந்தவர்களுக்கு இலவசமாகக் கஞ்சா வழங்கப்படும் .

வாஷிங்டன் மாகாணத்தில் இதுவரை 58% குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 49% மக்களுக்குத் தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த joints for jabs திட்டம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் என அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக அரிசோனா மாகாணத்திலும் இதேபோல தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச கஞ்சா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மத்திய அரசின் சட்டப்படி கஞ்சா தற்போது வரை தடை செய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்தான். ஆனாலும், அங்கு மாகாண அரசின் சட்டமே பிரதானம். அதன்படி அமெரிக்காவில் 36 மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்தச் சட்ட ரீதியான அனுமதி உள்ளது. இதற்காக அங்கு சிறப்புக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 14 மாகாணங்களில் மட்டுமே கஞ்சாவை பயன்படுத்தத் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here