எந்த வகையில் நியாயம் ?

சிலாங்கூர் சுல்தான் அதிருப்தி!

ஷா ஆலம், ஜூன் 9-
சிலாங்கூர் மாநிலத்திற்கான கோவிட்-19 தடுப்பூசி ஒதுக்கீடு சமச்சீரற்றதாக உள்ளது எனவும் நியாயமற்றதாக உள்ளது எனவும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நேற்று தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மக்கள் தொகை 65 லட்சமாகும். ஆனால் இந்த மாநிலத்திற்கு 615,210 சொட்டு தடுப்பூசிகளே விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது என கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு வெளியிட்டுள்ள தகவல்  அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

இதற்கு முன்பு 29 லட்சம் சொட்டு தடுப்பூசி சிலாங்கூர் மாநிலத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது என சுல்தான் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சராசாரி உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மாநிலம் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதால் இந்த மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும் என்று சுல்தான் ஷராஃபுடின் வலியுறுத்தி இருப்பதாக அவருடைய அந்தரங்கச் செயலாளர் முகமட் முனிர் பானி தனது அறிக்கையில் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கான தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தும்படி கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் மீதான சிறப்புக் குழுவுக்கு சுல்தான் அறைகூவல் விடுத்திருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் அதிகமான தடுப்பூசி மையங்களைத் திறப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனத்தைச் செலுத்தியபடியே தடுப்பூசி மையங்களுக்குள் நுழையும் வசதியை அதிகரிக்க வேண்டும் எனவும் நடமாடும் கிளினிக்குகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சுல்தான் ஆலோசனை கூறியிருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எஸ்ஓபி விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும். அவசிய அலுவல் இருந்தால் மட்டுமே  வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று  சுல்தான் நினைவுறுத்தினார்.

பெரிய அளவில் மருத்துவப் பரிசோதனை நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here