என்ன விலை ? எப்படித்தான் சமாளிப்பது!

மக்களின் வயிற்றில் நெருப்பு

சமையல் எண்ணெய்யின் விலையை 100 மடங்காக உயர்த்தி மலேசியக் குடும்பங்களின் வயிற்றில் நெருப்பை எரியவிட்டிருப் பதுதான் இன்றைய அரசாங்கத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது.

தேசிய முன்னணி ஆட்சியில் 21 வெள்ளியாகவும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் 17 வெள்ளியாகவும் இருந்த 5 கிலோ சாஜி சமையல் எண்ணெய் விலை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் பரிவில் 33 வெள்ளியாக விண்ணைத் தொடும் விலையில் விற்கப்படுகிறது.

நாட்டில் சமையல் எண்ணெய் கட்டுப்படுத்தப்பட்ட – பாதுகாக்கப்பட்ட பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இதற்கு அர்த்தம் தெரியாத அமைச்சரும் இடம்பெற்றிருப்பது தான் மலேசியர்களின் துரதிர்ஷ்டம்.

2020, ஜனவரி 17ஆம் தேதி (பக்காத்தான் ஹராப்பான் அரசு இன்னமும் பதவியில் இருந்த காலம்) 5 கிலோ சமையல் எண்ணெய் விலை அதன் வணிக முத்திரையின் அடிப்படையில் மாறுபட்டிருந்தது. வேறுபாடு என்னவோ இரண்டு அல்லது நான்கு வெள்ளிதான்.

ஆட்சி கவிழ்ந்ததும் இவற்றின் விலையும் ராக்கெட் வேகத்தில் எகிறியது.
அதே சமயத்தில் பிளாஸ்டிக் பைகளில் வரும் 1 கிலோ சமையல் எண்ணெய் விலை உச்சவரம்பாக 2.50 வெள்ளி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் விலையேற்றமும் இல்லை. இந்த எண்ணெய்க்கு அரசு உதவித் தொகை உண்டு.

1 கிலோ, 5 கிலோ எடையில் போத்தல்களில் வரும் சமையல் எண்ணெய்க்கு அரசாங்க மானிய உதவி இல்லை. இதுவே அவற்றின் ராக்கெட் வேக விலை உயர்வுக்குக் காரணம். அவற்றின் விலை தற்போது கிட்டத்தட்ட 100 மடங்கு உயர்ந்திருப்பதுதான் தலையைக் கிறுகிறுக்க வைக்கிறது.

இத்தனைக்கும் உள்நாட்டில்தான் இந்த அனைத்து வகை சமையல் எண்ணெய்யும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், வேற்றுக் கிரகத்தில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்வது போன்ற ஒரு மாயையை இந்த விலையேற்றம் பிரதிபலிக்கிறது.

5 கிலோ ஹெலாங் (கழுகு) மார்க் சமையல் எண்ணெய் வெ.9.95 முதல் வெ.10.00 வரை விலை எகிறிப்போய் இருக்கிறது. 2019 டிசம்பரில் பக்காத்தான் ஹராப்பான் காலகட்டத்தில் அதன் விலை வெ.24.59. நடப்பு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி யில் 2021, ஜூன் மாதத்தில் வெ.34.39 ஆக ஆகாயத்தை முட்டிக்கொண்டு இருக்கிறது.

விலை அதிகம் என்று மக்கள் நினைத்தால் அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படும் எண்ணெய்யை வாங்கலாம் என்று உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜி ரோசோல் ஹாஜி வாஹிட் பரிந்துரைத்திருக்கிறார்.

எதை வாங்க வேண்டும் – எதை வாங்க வேண்டாம் என்பதை பயனீட்டாளர்களாகிய மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும். இதைச் சொல்வதற்காக ஒரு துணை அமைச்சர் தேவையில்லை.

பிளாஸ்டிக் பையில் உள்ள எண்ணெய்யை வாங்கிவிட்டால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பிறந்துவிடுமா? ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 1.8 கிலோ சமையல் எண்ணெய் போதும் என்கிறார்.

இவரின் பேச்சில் – வாதத்தில் அர்த்தம் ஏதும் இருக்கிறதா?
மீன் பொரிப்பதாக இருந்தால்கூட குறைந்தபட்சம் 250 கிராம் அதாவது கால் கிலோ எண்ணெய் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 1.8 கிலோ சமையல் எண்ணெய் போதுமா? இவர் என்ன துணை அமைச்சரா – வியாபாரிகள் தரப்பு தரகரா?

பக்காத்தான் ஹராப்பான் காலத்தில் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். விலைகள் சாமானிய மக்களைப் பாதிக்காமல் விலைவாசியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

நடப்பு உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் நலத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி எங்கே? இந்த அவலத்திற்குத் தீர்வு காணாமல் எங்கு போய்விட்டார்?

பொருட்களின் விலை மக்களைப் பாதிக்காமல் எவ்வாறு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்ற சூத்திரத்தை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு ,  மக்கள் நலன்களுக்காக டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோனிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் தவறு இல்லையே!

 

பி ஆர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here