உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியுதவி; அதிர்ச்சியில் ரஷ்யா

ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பொருளாதார விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் தகவல் வெளியிட்டுள்ளார். ‘உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டு விட்டன. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவியளிப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் ஐரோப்பிய யூனியன் முன்னிலை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின்மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்தன. எனினும், அமெரிக்க எம்.பி.க்களில் ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக அந்த நாடு உக்ரைனுக்கு மேற்கொண்டு உதவிகள் அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.

இது, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. அதேபோல உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் திட்டத்திலும் உள் அரசியல் காரணமாக இழுபறி நீடித்து வந்தது. பொருளாதாரச் சரிவிலிருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் வகையில் அந்த நாட்டுக்கு இந்த ஆண்டிலிருந்து வரும் 2027-ம் ஆண்டு வரை 5,000 கோடி யூரோ நிதியுதவி அளிக்க ஐரோப்பிய யூனியன் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முடிவெடுத்தது.

மேலும், ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை சேர்த்துக் கொள்ளவும் உறுப்பு நாடுகள் முடிவு செய்தன. இதற்கு உடனடி ஒப்புதல் வழங்கிய ஹங்கேரி, உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியுதவி வழங்கும் திட்டத்தை மட்டும் எதிர்த்தது. யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் ஒரு மனதாக சம்மதித்தால்தான் அந்தத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வர முடியும் என்ற நிலையில், இது தொடர்பாக நடைபெற்று வந்த கூட்டங்களைப் புறக்கணித்ததன் மூலம் இதற்கான ஒப்பந்த உருவாக்கத்தை ஹங்கேரி தடுத்து வந்தது. இந்த நிலையில், உக்ரைனுக்கு 5,000 கோடி யூரோ நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனின் அனைத்து உறுப்பு நாடுகளும் நேற்று ஒருசேர ஒப்புதல் வழங்கியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here