டெல்டா பிளஸ் கொரோனாவால் உலக நாடுகள் அச்சம்

தடுப்பூசியின் வீரியம் தடுக்காதா?

கடந்த ஆண்டு செப்டம்பரில் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்கிற டெல்டா என உருமாறிய வைரஸ், 2-ஆவது அலையில் இந்தியாவில் 70% தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் பரவிய ஆல்பா வகை வைரஸை விட டெல்டா வகை வைரஸ்கள் பரவும் வேகம் 60% அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கொரோனா, அதிக ஆபத்தான வைரஸ் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுவதற்கு இந்த டெல்டா வகை கொரோனாவே காரணம்.

இந்த நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸின் மற்றோர் உருமாற்றமான டெல்டா பிளஸ் எனும் திரிபு, உலக நாடுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது.

தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா , டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி, டெல்டா பிளஸ்க்கு எதிராக குறைந்த வீரியத்துடன் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பைசர், கோவிஷீல்ட் போன்றவை டெல்டா வைரஸ்க்கு எதிராக ஒரு டோஸ் செலுத்தியவர்களுக்கு 33% எதிர்ப்பு திறன் மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போது மேலும் மரபணு ரீதியிலான உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் என்ற வைரஸாக பரவி வருகிறது. பரவும் வேகம், பாதிப்பு ஏற்படுத்துவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருக்குலைப்பது என டெல்டா பிளஸ் பரவுதல் மிகுந்த அச்சம் தருவதாக இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஏற்கனவே மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டெல்டா பிளஸ் கொரோனாவால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். இதனால் தற்போதே தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here