13 கிளைகளை மூடுவதாக HSBC (எச்.எஸ்.பி.சி) வங்கி அறிவிப்பு

கோலாலம்பூர், (ஜூன் 16) :  இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி தனது 13 கிளைகளை மூடுவதாக HSBC (எச்.எஸ்.பி.சி) வங்கி  மலேசியா நேற்று அறிவித்தது.

   வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம், தொலைபேசி மூலமான பேங்க் சேவை அல்லது டிஜிட்டல் சேவை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அது கூறியது.

   மலேசியாவில் நாங்கள் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றோம். எதிர்கால வங்கி நடைமுறைகளுக்கு நாங்கள் மாறுகின்றோம் என்று எச்எஸ்பிசி கூறியது.

   சந்தை வளர்ச்சியில் நாடு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது எனவும் அது தெரிவித்தது. நிதி வங்கிச் சேவைகளின் உருமாற்றத்திற்கு ஏற்ப எங்களுடைய கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறோம்.

   அதே சமயம் எங்களின் டிஜிட்டல் வங்கிச் சேவையை விரிவு படுத்துகின்றோம் என்றும் அது  கூறியது. டிஆர்எக்ஸ் நிதி மையத்தில் இருக்கும் தனது புதிய மலேசியத் தலைமையகத்தில் எச்எஸ்பிசி மலேசியா ஒரு பில்லியன் வெள்ளியை முதலீடு செய்திருப்பதன் மூலம் எங்களின் ஈடுபாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்று அது கூறியது.

   2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுக்கு இடையே தனது டிஜிட்டல் ஆற்றலையும் புதிய தொழில்நுட்ப ஆற்றலையும் வலுப்படுத்துவதற்கு தனது வங்கிக் கிளைகளின் சேவைத் தரத்தை மேம்படுத்த 160 மில்லியன் வெள்ளிக்கு மேல் முதலீடு செய்திருப்பதையும் அது சுட்டிக்காட்டியது. மலேசியாவில் 130 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட வரலாற்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றத் திட்டமிட்டுள்ளோம். முதலீடுகளைத் தொடர்வதிலும் முனைப்புக் காட்டுவோம் என்று அது கூறியது.

   இதற்கிடையே எச்.எஸ்.பி.சி மலேசியா வங்கி கடந்த ஜூன் 3ஆம் தேதி பணியாளர்கள் சுயமாக வேலையில் இருந்து விலகும் திட்டத்தையும் பரஸ்பர வேலை விலகல் திட்டத்தையும் மேற்கொண்டிருந்ததாக மலேசிய வங்கிப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.சாலமன் கூறினார்.

   இந்தத் திட்டத்தால் 600 பணியாளர்கள் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 6 ஆண்டுகளில் மூன்றாவது திட்டமாக இது அமைகிறது.

   கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இது இன்னொரு பேரிடியாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here