மக்களின் தேவைகளில் கவனம் தேவை

????????????????????????????????????

முன்னுரிமை வழங்கபடவேண்டும்!

நாட்டின் எந்த ஒரு பொருளாதார மீட்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அதில் மக்களின் உடனடித் தேவைகளை ஈடுசெய்வதாக இருக்க வேண்டும். அதற்காக முன்னுரிமை தரப்பட வேண்டும்.

2020 மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்றளவில் அடங்கியபாடில்லை. ஏழைகளின் வாழ்வும் வாழ்வாதாரமும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாத நிலையில் நிலைகுத்திப் போயிருக்கிறது.

இந்தப் பாதிப்புகளில் இருந்து இவர்களால் உடனடியாக மீண்டு வர முடியாது. இந்நிலையில் அரசாங்கம் அதன் கவனத்தை இந்த மக்களின் பக்கம் திருப்ப வேண்டும்.

நாளை என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாத – தெரியாத நிலையில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை தரும் குறுகிய கால மீட்சி  உதவித் திட்டங்களை அரசாங்கம் வகுத்து செயல்படுத்த வேண்டும். இதுவே இன்றைய அவசரத் தேவையாகவும் இருக்கிறது.

நாட்டின் நிதி – பொருளாதார நிலை அடுத்த காலாண்டில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியாத ஓர் இக்கட்டான நிலை. அதேவேளையில் பொருளாதாரம் எந்த அளவுக்கு நிலைத்தன்மை பெற்றிருக்கும் என்பதையும் தீர்மானிக்க முடியாத திரிசங்கு நிலையில் தான் நாடும் மக்களும் உள்ளனர்.

இந்த நெருக்கடி, சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் அரசாங்கத்தின் மீட்சி ,  ஊக்குவிப்புத் திட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் எந்த அளவுக்கு உந்துசக்தியாக இருக்கின்றன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மலேசியாவின் பொருளாதார மீட்சிக்கு உலகப் பொருளாதார மீட்சியும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்ற நிலையில் அதற்குரிய நீண்ட காலத் திட்டங்களில் அரசாங்கம் ஈடுபாடுகொள்வது அவசியமாகும்.

நாட்டையும் மக்களையும் கோவிட்-19 கொடுந்தொற்றுப் பிடியில் இருந்து மீட்டுக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு அரசாங்கத்தின் தோளில் ஏற்றப்பட்டிருந்தாலும் வலுவான பொருளாதார மீட்சியிலும் அதீத கவனம் ஙெ்லுத்த வேண்டியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகளிடத்தில் மட்டும் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்டால் போதாது. மாறாக வணிக நிபுணர்கள், வெற்றிபெற்ற தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், துறை சார்ந்த அறிவாளிகள் ஆகியோரின் கருத்துகளையும் கேட்டுப் பெற வேண்டும்.

இதன்வழி ஒரு சமநிலையான கருத்தோட்டங்களைப் பெற முடியும். ஆக்கப்பூர்வ மக்கள் நலன் திட்டங்களையும் வகுக்க முடியும்.

மேலும் யார் யார் எல்லாம் இந்த மக்கள் நல்வாழ்வுக்கு உதவ முடியுமோ அத்தனை பேரிடமும் அரசாங்கம் கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

மீட்சிக்கு முந்தைய – மீட்சிக்குப் பிந்தைய என இருவேறு கோணங்களில் அரசாங்கம் தெளிவுறத் திட்டங்களை ஆய்வுசெய்து வகுத்திட வேண்டும். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எவ்வகையில் – எவ்வாறு உதவ முடியும் என்பதையும் திட்டவட்டமாக வரையறுக்க முடியும்.

கோவிட்-19 கோரத் தாண்டவத்தால் நம்முடைய பொருளாதார மேம்பாட்டில் – வளர்ச்சியில் இரண்டு ஆண்டுகளை இழந்துவிட்டோம். கோவிட்-19 அனைத்து மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் விருப்பத்திற்கு பந்தாடி இருக்கிறது.

இந்தப் பேரழிவில் இருந்து விரைந்து மீண்டு வருவதற்கு நம்முடைய அனைத்து முயற்சிகளையும் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்றால் பல உலக நாடுகள் வீழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டன. ஆனால், அவை இப்போது சன்னஞ்சன்னமாக மீட்சிபெற்று வருகின்றன.

இதில் மலேசியா பின்தங்கிவிடக்கூடாது. அடுத்த மிகப்பெரிய மாற்றங்களுக்கு மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீட்சித் திட்டங்கள் அதன் இலக்கில் வெற்றி பெறும்.

இழந்த வேலை வாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் மீண்டும் பெற்றுத் தருவதில் உள்ள சவால்களை மக்களுக்குப் புரியவைத்து தெளிவுபடுத்துவதில் அரசாங்கம் அதன் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும்.
மக்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உறுதிசெய்யப்பட வேண்டும். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்!

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here