10 மாதங்களில் 43 முறை பாசிட்டிவ்; கொரோனா வைரஸுடன் சாதனை படைத்த முதியவர்

பல முறை ஸ்மித் இறந்துவிடுவார் என மனதை தேற்றியிருக்கிறேன், இருப்பினும் அவர் தொடர்ந்து மரணத்தில் இருந்து மீண்டு வருவதை வாடிக்கையாக மாற்றிக்கொண்டார். அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு கூட ஏற்பாடு செய்து வைத்தோம் என சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஸ்மித்தின் மனைவி.

coronaநம்மில் பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், மேலும் ஒன்றிரண்டு முறை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம். இன்னும் சிலருக்கோ 30 நாட்கள் அல்லது 45 நாட்கள் வரை கூட கொரோனா பாதிப்பு இருந்திருந்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் 10 மாதங்களாக கொரோனா தொற்றுடன் வாழ்ந்து தற்போது அதில் இருந்து மீண்டு மருத்துவ உலகையே மிரளச் செய்திருக்கிறார். அவரின் உடலில் வைரஸ் இத்தனை காலமாக எங்கு மறைந்து இருந்தது என்பது குறித்து தற்போது ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.

மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டாலைச் சேர்ந்த ஓட்டுனர் பயிற்றுநராக இருந்து வரும் டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரால் நோய்த்தொற்றில் இருந்து மீளவே முடியாமல் போயுள்ளது.

கடந்த 10 மாதங்களாக வைரஸ் அவரின் உடலிலேயே தங்கியிருந்துள்ளது. இத்தனை மாதங்களில் அவருக்கு 43 முறை கொரோனா பாசிட்டிவ் ஆகியிருக்கிறது. மிகவும் சீரியசான நிலைக்கு சென்றதால் 7 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இருப்பினும் அவர் நோயிலிருந்து மீளாமல் இருந்து வந்துள்ளார்.

ஸ்மித்திற்கு முதன் முதலாக வைரஸ் தொற்று ஏற்படும் முன்னதாக அவர் நுரையீரல் தொற்று மற்றும் லுகேமியா ஆகியவற்றில் இருந்து குணமாகியிருக்கிறார்.

பலவாறாக சிகிச்சை அளித்தும் ஸ்மித்திற்கு கொரோனா நெகட்டிவ் ஆகாததால் மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். தொடர்ந்து அவருக்கு பலகட்ட சிகிச்சை தரப்பட்டிருக்கிறது.

கடைசியாக ரீஜெனரான் எனப்படும் நிறுவனம் தயாரித்த செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல்-ஐ 45 நாட்கள் தொடர்ந்து ஸ்மித்துக்கு கொடுத்துள்ளனர். அதன் முடிவில் தற்போது ஸ்மித் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நெகட்டிவ் ஆகியுள்ளார். 305 நாட்களுக்கு பின்னர் ஸ்மித் நெகட்டிவ் ஆனதால் ஷாம்பெய்ன் பாட்டிலை துறந்து மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கின்றனர் அவரும் அவருடைய மனைவியும்.

சமீபத்தில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கணவன் – மனைவி இருவரும் பேசுகையில், பல முறை ஸ்மித் இறந்துவிடுவார் என மனதை தேற்றியிருக்கிறேன், இருப்பினும் அவர் தொடர்ந்து மரணத்தில் இருந்து மீண்டு வருவதை வாடிக்கையாக மாற்றிக்கொண்டார். அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு கூட ஏற்பாடு செய்து வைத்தோம் என சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஸ்மித்தின் மனைவி.

பிரிஸ்டல் பல்கலையின் வைராலஜிஸ்டான ஆண்டிரூ டேவிட்சன் கூறுகையில், ஸ்மித்தின் விவகாரம் மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது. அவரின் உடலில் வைரஸ் எங்கு தான் இத்தனை காலம் தங்கியிருந்தது என்பது ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. ஸ்மித் குறித்து ஆய்வு அறிக்கை விரைவில் மருத்துவ இதழில் வெளியாகும் என அவர் தெரிவித்தார். மேலும் ஸ்மித் தான் உலகிலேயே நீண்ட காலம் நோய்த்தொற்றுக்கு ஆளான நபராக இருக்க முடியும் எனவும் ஆண்டிரூ டேவிட்சன் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here