கனடா பிரதமர் ஜஸ்டின் வலியுறுத்தல்
கனடா: பிரதமர் வலியுறுத்தல்.. கனடாவில் 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரியுள்ளார்.
கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டபோது பூமிக்கு அடியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழனன்று சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியில் 751 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக The First Nations என்ற கனடா பழங்குடி குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் ஜஸடின் ட்ரூடோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல, கனடிய மண்ணில் உள்ள பழங்குடியின கனடியர்களிடம் மன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியம்” என புனித போப் பிரான்சிஸுடன் தனிப்பட்ட முறையில் நான் பேசியுள்ளேன்” என்றும் கூறினார். மேலும் “கத்தோலிக்க திருச்சபை தலைமை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதை நான் அறிவேன்” என்றும் கூறினார்.