தன்பாலின உறவாளர்களுக்கும் பிரான்ஸ் உறுதிப்படுத்திய உரிமை

உலகிலேயே முதன்முறையாக 

தன்பாலினத்தார்கள் உலகமெங்கிலும் இருக்கிறார்கள். இவர்களின் படைப்பு ரகசியமானதல்ல. இறைவனின் படைப்பினில் இவர்களும் ஓர் அங்கம் . படைப்பைச் செய்தது இறை என்றால் தவறு எங்கே நடந்திருக்கிறது?

இந்த ஆராய்ச்சியெல்லாம் அவசியமற்றதுதான் என்றால் சட்டத்திற்கு வருவோம் . நாட்டுக்கு நாடு சட்டம் மாறுபடலாம். அது கூட தன்பாலினத்தார் பிரச்சினை அல்ல.

ஆனால் அவர்களுக்கும் மனம் , விருப்பம், இன்னும் என்னவெல்லாமோ இருக்கிறதே! அவற்றில் நியாயமானவற்றுக்குத் தடை ஏன்?

சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிப்பதில் சிலபல நேரங்களில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளை சற்று விஞ்சி நிற்கின்றன என்று சொல்லலாம்.

அப்படியொரு நீதியை நிலைநாட்டும் சட்டத்தை பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற கீழவை நிறைவேற்றியிருக்கிறது. தனித்து வாழும் பெண்கள், தன்பாலின உறவு கொள்ளும் பெண்கள் மருத்துவ உதவியுடன் கருத்தரிக்க ஏதுவாக ஒரு சட்டத்தை வடிவமைத்திருக்கிறது.

இந்த சட்டத்தை பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்தில் கீழவையில் 326 சாதக ஓட்டுக்களையும், 115 எதிர் ஓட்டுக்களையும் பெற்று நிறைவேறியுள்ளது. LGBT லெஸ்பியன் கே பைசெக்ஸுவல் ட்ரான்ஸ்ஜெண்டர் ரைட்ஸ் எனப்படும் தன்பாலின உறவாளர்கள் உரிமைக் குழுவினரால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இச்சட்டம் நிறைவேறியிருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்நிலையில், தற்போது செயற்கை கருத்தரித்தல், ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருத்தரித்தல் ஆகியனவற்றை தன்பாலின உறவாளர்களுக்கும் வழங்க சட்டப்பூர்வ வழிவகை செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கருத்தரித்தலுக்கான சிகிச்சை முற்றிலும் இலவசம். இப்போது இந்த உரிமை தன்பாலின உறவாளர்கள், தனியாக வாழும் பெண்களுக்கும் கிடைக்கும்.

இது குறித்து சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரான் கூறும்போது, இந்தச் சட்டத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமல்படுத்தவிருக்கிறோம். அப்போதுதான், முதல் குழந்தையை இந்த ஆண்டு இறுதிக்குள் கருவாகச் செய்ய இயலும் என்றார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாகவே காரசாரம் விவாதம் நடந்துவந்த நிலையில் தற்போது சட்டம் நிறைவேறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் LGBT கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ கேபிட்டன் இது குறித்து, நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த முன்னேற்றம் நிறைவேறியுள்ளதை வரவேற்கிறோம். இது எங்களுக்கு திருப்தியளிக்கிறது. ஆனால், இந்த சட்டம் பிறந்த கதைதான் சற்று வலி மிகுந்தது என்று நெகிழ்ச்சி பொங்க கூறினார்.

பிரான்ஸ் நாட்டில் தனித்து வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குச் செல்ல நேர்கிறது. இங்கு தனித்து வாழும் பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்ததால் அவர்கள் ஒன்று தங்களின் விருப்பத்தைத் தள்ளிப் போட வேண்டியிருந்தது. இல்லை மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

தற்போது புதிய சட்டம் எல்லாவற்றிற்கும் தீர்வைத் தந்துள்ளது. இருப்பினும் வாடகைத்தாய் தடைக்கு இந்தச் சட்டம் எவ்வித தீர்வையும் தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரான்ஸைப் போல் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here